தமிழகம்

24 மணி நேரமும் கடைகள் திறக்க அரசாணை: போலீஸுக்கு சவாலாகும் ‘தூங்கா நகரம்’

என்.சன்னாசி

24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம் என்று அனுமதி அளித்து வெளியாகியுள்ள அரசாணையால் தூங்கா நகரமான மதுரையில் பாதுகாப்பு அளிப்பது போலீஸாருக்கு சவாலாக இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தொழிலாளர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

சங்க காலம் மூலம் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை நகரம் இந்த உத்தரவு மூலம் மீண்டும் சுறுசுறுப்படைய இருக்கிறது. கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற நடவடிக்கையால் மதுரை நகரில் பாதுகாப்பு அளிப்பதில் போலீஸாருக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மதுரை நகரில் ஏற்கெனவே ரவுடிகள், குற்றச்செயல் புரிவோரை கண்காணிப்பதில் பெரும் சிக்கல் இருக்கும் சூழலில் இனிமேல் 24 மணி நேரமும் ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்படும்போது கூடுதல் போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கு போலீஸ் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மதுரை நகரைப் பொருத்தவரை சுமார் 2 ஆயிரம் போலீஸார் வரை உள்ளனர். சிறப்புப் பணி, மாற்றுப்பணி, சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு தனிப்படை, நீதிமன்றப்பணி தவிர 60 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான பணியில் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களே இரவு, பகல் என சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர்.

தற்போது இரவு 11 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்பதால் ஓரளவுக்கு தொய்வின்றி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இனிமேல் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் என்ற அரசாணை அமலுக்கு வரும்போது, 50 சதவீதத்துக்கு மேலான கடைகள் இரவு 11 மணிக்கு மேல் திறக்க வாய்ப்புள்ளது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய கடை வீதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இரவு நேரங்களில் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அச்சுறுத்தல் இன்றி பாதுகாப்பு அளிக்கப்படும். பொதுமக்களும், வர்த்தகர்களும் போலீஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.

24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நாங்கள் ஆட்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பாதுகாப்பு அளிக்காமல் இருக்க முடியாது. டாஸ்மாக் கடைகள் நேரம் பற்றி தெளிவான தகவல் இல்லை. டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறக்கப்படுமானால் அதுபோன்ற இடங்களில் கூடுதல் போலீஸார் அவசியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டியதிருக்கும், என்றனர்.

SCROLL FOR NEXT