நாமக்கல்லில் தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் அப்பகுதியில் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவராக (மாஜிஸ்திரேட்) பணியாற்றி வருபவர் வடிவேல் (39).
நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள அரசினர் பள்ளிக்கு திடீரென மாஜிஸ்திரேட்டின் வாகனம் வந்து நிற்பதைப் பார்த்து ஆசிரியர்கள் திகைத்தனர்.
உடனடியாக வெளியே வந்த தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் மாஜிஸ்திரேட்டுக்கு வணக்கம் கூறி, என்ன காரியமாக வந்தீர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டனர்.
என் குழந்தைகளை உங்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும் அதற்காக வந்தேன் என சிரித்தபடி கூறியுள்ளார்.
உடனடியாக சேர்த்துக்கொள்கிறோம் என்று தலைமை ஆசிரியர் கூறினார். எனது மகன் நிஷாந்த் சக்தியை 8-ம் வகுப்பிலும், எனது மகள் ரீமா சக்தியை 6-ம் வகுப்பிலும் சேர்க்கவேண்டும் என தன் குழந்தைகளை அறிமுகப்படுத்திய அவர் இருவரையும் பள்ளியில் சேர்க்கை அளிக்கக் கோரி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர், அவரது மகனை 8-ம் வகுப்பிலும், மகளை 6-ம் வகுப்பிலும் சேர்த்துக் கொண்டார்.
குற்றவியல் நடுவர் வடிவேல் இதற்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் பணியாற்றியபோது அங்கும் அரசுப் பள்ளியிலேயே குழந்தைகளைப் படிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவியல் நடுவர் பதவி வகிக்கும் ஒருவர் தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதன் மூலம் பள்ளியின் தரமும் காக்கப்படும். மற்ற பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.