தமிழகம்

உலக போதை எதிர்ப்பு நாள்: இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, இருமல் மருந்து

மு.அப்துல் முத்தலீஃப்

உலக போதை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள் கஞ்சா போதைப்பிடியில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.

உலக அளவில் போதை எதிர்ப்பு தினம் ஜூலை.26 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. போதைப்பழக்கம் பல தலைமுறைகளை பாதிக்கக்கூடிய மோசமான ஒன்று. போதைபொருள் கடத்தலும், ஆயுதக்கடத்தலும் உலகில் மிகப்பெரிய தொழிலாக நடந்து வருகிறது.

போதைப்பொருளை கடத்தி பிடிபட்டால் மரணதண்டனை அளிக்கும் நாடுகள் பல உள்ளன, பல நாடுகள் ஆயுள்தண்டனையும் குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனையும் வழங்குகின்றன.

இந்தியாவும் போதைப்பொருளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. போதைப்பொருட்கள் கடல் மார்கமாக அதிகமாக கடத்தப்படுகிறது. இதுதவிர உள்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன.

போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன்மூலம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப்பழக்கத்துக்கு ஆட்படுபவர்கள் போதைப்பொருளை வாங்குவதற்காக எதையும் செய்யவும் தயாராக உள்ளனர். அதற்காக திருடுவது, வழிப்பறி செய்வது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நல்ல சமூகத்துக்கு சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. சமீப காலமாக சென்னையில் கஞ்சா போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளது செய்திகள் வாயிலாக அதிகரித்து வருகிறது.

குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபர்கள், கொடூர குற்றத்தில் நபர்கள் அதிகமானோர் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்களாக உள்ளனர்.சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க கருவிகள் உள்ளது, உடனடியாக பிடித்து அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஆனால் கஞ்சா புகைத்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதே வகையிலான போதையுடன்தான் வாகனம் ஓட்டுகின்றனர், குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதை கண்காணித்து பிடிக்க கருவியும் இல்லை, சட்டமும் இல்லை.

இதேப்போன்று சென்னையில் மருந்துக்கடைகளில்  தடைச் செய்யப்பட்ட இருமல் மருந்துகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இவைகள் போதை தரக்கூடியவை. இந்தியாவில் தடைச் செய்யப்பட்ட 2 முக்கிய கம்பெனிகள் இன்றும் தடையில்லாமல் ஆன்லைனிலும், மருந்துக்கடைகளிலும் கிடைக்கிறது.

சமீபத்தில் மளிகைக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து மொத்தமாக நூற்றுக்கணக்கான பாட்டில்கள் சிக்கியது. இதை போதைமருந்தாக இளைஞர்கள் உபயோகிக்கின்றனர். இந்த மருந்தில் அளவுக்கதிகமாக 4 சதவீதம் க்ளோரோ பினிரமைன் மாலியேட் –சிபிஎம் என்பார்கள் அது உள்ளது.

மேலும் கோடேன் பாஸ்பேட் எனப்படும் மருந்தும் 10 சதவீதம் உள்ளது. இது போதைத்தரும் வஸ்து ஆகும். இவை இரண்டும் அளவுக்கதிகமாக உள்ளதால் இந்த மருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. இதை வாங்கி ஒருபாட்டிலையும் முழுமையாக குடிக்கின்றனர். அது மிதமிஞ்சிய போதையையும், வலியை உணராத்தன்மையையும் அளிப்பதாக கூறுகிறார்கள்.

இந்த மருந்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு குற்றச்செயலில் ஈடுபடும் தங்களுக்கு பயம் என்பதே இல்லாமலும் குற்ற உணர்ச்சியும் குறைவதாக தெரிவித்துள்ளனர். இந்த இருமல் மருந்து தற்போது சென்னை இளைஞர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. இதை தொடர்ச்சியாக அருந்தினால் அதற்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தவிர மருந்துக்கடைகளில் உடல் வலிக்கு எதிரான வலி நிவாரணி மாத்திரைகள், அறுவை சிகிச்சை நேரத்தில் செலுத்தப்படும் வலிநிவாரணி மருந்து போன்றவற்றையும் வாங்கி உபயோக்கிக்கின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அதிக அளவு கஞ்சா பிடிபட்டுள்ளது. போதைபொருள் தடுப்பு பிரிவு மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த ஆண்டு (ஜூன் 2018-மே-2019 வரை) 8260 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. இது முந்தைய  ஆண்டுகளைவிட மிகவும் அதிகம் என போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கல்லூரிகள், பள்ளிகளில் கஞ்சா பொட்டலங்கள் சாதாரணமாக விற்கப்படுகிறது. குடிசைப்பகுதிகள் குறிப்பாக டிபி சத்திரம், கண்ணகி நகர், ஐஸ் ஹவுஸ், சேத்துப்பட்டு, அன்னை சத்யா நகர், அபிராமபுரம், பட்டினப்பாக்கம், பேசின் பாலம், வடசென்னையின் பல பகுதிகளில் கஞ்சா அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

கஞ்சா அதிமாக ஆந்திரா பகுதிகளிலிருந்தும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலிருந்தும் வருகின்றது. கஞ்சா கடத்தல் மிகப்பெரிய நெட்வர்க்காக உள்ளது. அதிமாக ரயில் மூலம் கடத்துகின்றனர். பின்னர் வாகனங்களில் கடத்தப்படுகிறது. இதை எழுதும் நேரம் சென்னை பரங்கிமலையில் வேன்மூலம் கடத்திவரப்பட்ட 350 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வைப்போலவே கஞ்சா மற்றும் போதைமருத்துகளுக்கு எதிராக கடுமையான முயற்சி எடுக்காவிட்டால் இளைய சமுதாயம் கடுமையாக பாதிக்கப்படும்.

தமிழகத்தில் கஞ்சா, கொகைன், கேடமைன், எல்பெட்ரின், எல்எஸ்டி, ஹஷிஸ் எண்ணெய் போன்றவைகள் இருந்தாலும் கஞ்சாவே அதிகம் கடத்தப்பட்டு சிக்கியுள்ளது. போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வும், வேலைவாய்ப்பும், கல்வியும், நல்ல புறச்சூழ்நிலையும் மட்டுமே இதை மாற்ற முடியும்.

SCROLL FOR NEXT