தமிழகம்

திமுகவின் போர்ப்படைத் தளபதி: ஜானகிராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78. அரசு மரியாதையுடன் ஜானகிராமனின் உடல், அவர் பிறந்த கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "புதுச்சேரி முன்னாள் முதல்வரும், திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமனின் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தியறிந்து துயரமடைந்தேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் 1985-ல் வெற்றி பெற்ற அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினரானவர். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்வராகவும் பணியாற்றி புதுச்சேரி மக்களுக்காகவும், அந்த மாநில முன்னேற்றத்திற்காக அரிய பணிகளை ஆற்றியவர்.

'மேகலா பிக்சர்ஸில்' மேலாளராகப் பணியாற்றிய அவர் பள்ளிப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர். 1960 முதல் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு- புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளராக பணியாற்றி- திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவும், தொடர்ந்து இயக்கம் கம்பீரமாக நிற்கவும், திராவிட இயக்கத்தின் கொள்கை மாநிலத்தில் எங்கும் பரவவும் பாடுபட்டவர்- ஓடி ஓடி உழைத்தவர் ஜானகிராமன் என்பதை நானறிவேன்.

என் மீது தனிப்பற்றும், பாசமும் வைத்திருந்த அவரை இழந்து இன்று தவிக்கிறேன். "எளிமைக்கு இலக்கணம் தேடினால் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிற உருவம் புதுவை ஆர்.வி.ஜானகிராமன்தான்" என்று தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்டு, 2005 ஆம் ஆண்டே ஜானகிராமனுக்கு திமுகவின் உயரிய முப்பெரும் விழா விருதான "அண்ணா விருது" வழங்கி கவுரவித்தார் தலைவர் கருணாநிதி.

அண்ணா, இந்திரா காந்தி ஆகியோருக்கு கார் ஓட்டும் அரிய வாய்ப்பினைப் பெற்ற அவர், தலைவர் கருணாநிதி மீதான பாசத்தை தணியாத தாகம் போல் என்றும் வைத்திருந்தவர். தலைவர் கருணாநிதியின் சொல்லைத் தட்டாத கழக தொண்டராக கடைசி வரை விளங்கிய ஆர்.வி ஜானகிராமனுக்கும், தலைவர் கருணாநிதிக்கும் இடையிலான உறவு- புதுச்சேரி மக்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்திற்கு பெருமை சேர்த்த ஒப்பற்ற உறவாக திகழ்ந்தது.

புதுச்சேரியில் முன்னணித் தலைவரான- திமுகவின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவரான ஆர்.வி ஜானகிராமனை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதுச்சேரி கழக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்", என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT