தான் அதிமுகவில் இணைவது குறித்த தகவல் வெளியானதற்கு அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச் செல்வன் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் கூறும்போது, ''அமமுக ஒன்றுமில்லாத புஸ்வாணமாகி விட்டது. இதனால் அந்த கூடாரமும் காலியாகிவிட்டது. முதல்வர், துணை முதல்வரில் இருந்து அனைவருமே தொண்டர்களை அதிமுகவுக்குத் திரும்ப வருமாறு அழைக்கிறோம்.
ஜெயலலிதாவின் கட்சியும் ஆட்சியும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்திருக்கும். அந்த வகையில் தங்க தமிழ்ச் செல்வன் சரியான கட்சிக்கு வந்திருக்கிறார்'' என்றார்.
ஆனால் அதிமுகவில் இணையும் தகவலை மறுத்துள்ள தங்க தமிழ்ச் செல்வன், ''இதுகுறித்து வெளியான தகவல்களை நான் இன்னும் பார்க்கவில்லை. அதிமுகவில் இணைவேன் என்பது தவறான செய்தி. இதைப் பரப்பியது தவறான செயல்.
இதற்கு நான் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துவிட்டேன். இதை வேண்டுமென்றே யாரோ, திட்டமிட்டுப் பரப்பியுள்ளனர்'' என்றார் தங்க தமிழ்ச் செல்வன்.
அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான தங்க தமிழ்ச் செல்வன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் நின்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட அவர், அங்கு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.