மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் சேலம் சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக மதுரை சரகத்துக்கு ஆனி விஜயா புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை சரகத்துக்கு 2-வது பெண் டிஐஜி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
இதில், மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் சேலம் சரக டிஐஜி யாக மாற்றப்பட்டுள்ளார். பிரதீப் குமார் கடந்த 2017 ஜூன் 30-ல் மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்று சரியாக இரண்டு ஆண்டு காலம் முடிந்த நிலையில், அவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி ஆனி விஜயா டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை சரகத்தின் முதல் பெண் டிஐஜி பாலநாகதேவி. கடந்த 2012-ல் மதுரை டி.ஐ.ஜியாக இருந்த சத்தியமூர்த்தி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பாலநாகதேவி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் தற்போது மீண்டும் மதுரை சரகத்துக்கு பெண் டிஐஜி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனி விஜயா ஐபிஎஸ் திருச்சியில் ரயில்வே எஸ்.பி.யாக இருந்தபோதுதான் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை சம்பவம் நடந்தது. அப்போது ஸ்வாதி வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.