மதுரை மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான இளைஞரை செப்.30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை, பேரையூர் அருகேயுள்ள சின்ன பூலாம் பட்டியைச் சேர்ந்தவர்கள் மீனா, அங்காள ஈஸ்வரி இருவரும் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பி.ஏ படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் மீது ஒருவர் ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மாணவிகள் மீது ஆசிட் வீசியதாக திருமங்கலத் தைச் சேர்ந்த சங்கரநாராயணன்(24) என்பவரை நேற்றுமுன்தினம் அவரது தந்தை சுதாகரே மதுரை எஸ்பியிடம் ஒப்படைத்தார். சத்திரப் பட்டி காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பெண்கள் மீதிருந்த வெறுப்பு காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரியவந்தது. அதன்பின் அவரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது அந்நபர் குறித்த மருத்துவ அறிக்கையை போலீஸார் தாக்கல் செய்யவில்லை. எனவே மாஜிஸ்திரேட் போலீஸாரை திருப்பி அனுப்பினார். இதையடுத்து சங்கரநாராயணை திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து, மருத்துவ அறிக்கையுடன் மீண்டும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அந்நபர் ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், சிகிச்சை பெற்று தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்நபரை செப்.30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்தி ரேட் உத்தரவிட்டார். மேலும், 10 நாட்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், அவரது உடல்நிலை மற்றும் மனநலத்தை தொடர்ந்து கண்காணித்து, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யு மாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட் டார். இதைத்தொடர்ந்து, போலீஸார் அவரை மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.