தமிழகம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு அவசியமில்லை; கட்சிக்குள் கோஷ்டி பூசலும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

அதிமுகவில் ஒற்றஒத் தலைமைக்கு அவசியமில்லை என்றும் கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏதுமில்லை என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் உடற்பயிற்சிக் கூடம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தது வழக்கமான ஒன்று. அரசு நிர்வாகம் பற்றி ஆளுநரிடம் முதல்வர் விளக்கிக் கூறுவது மரபே. இதன் பின்னணியில் வேறு எதுவும் இல்லை.

நேற்று நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. வழக்கமாக தேர்தல் முடிவுகளுக்குப் பின் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது இயல்பானதே. அப்படித்தான் நேற்றும் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் நடந்த கூட்டம் சுமுகமாக முடிந்தது.

இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றியெல்லாம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு அவசியமில்லை; கட்சிக்குள் கோஷ்டி பூசலும் இல்லை. அது ஒரு எம்.எல்.ஏ.,வின் தனிப்பட்ட கருத்து. அது பெரிய அளவில் சர்ச்சையாகக்கூட ஆகவில்லை. இயக்கம் ராணுவக் கட்டுப்பாட்டுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது எங்கள் இலக்கு உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி என்பது மட்டுமே.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சியினர் அனைவருமே தற்போது இருக்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்போம், ஒத்துழைப்பு அளிப்போம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றே விளக்கமளித்துவிட்டார். எனவே, அதுதான் தலைமை சர்ச்சையில் எங்கள் அனைவரின் நிலைப்பாடும்" என்றார்.

SCROLL FOR NEXT