தமிழகம்

சேலையூரில்  ஃப்ரிட்ஜ்  வெடித்து தீவிபத்து: மூச்சுத் திணறலால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மனைவி, தாயாருடன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தாம்பரத்தை அடுத்த சேலையூரில்  ஃப்ரிட்ஜ்   வெடித்து தீ பற்றியதில் புகை மூட்டத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மனைவி மற்றும் தாயாருடன் உயிரிழந்தார்.

சென்னை தாம்பரம், சேலையூரை அடுத்த திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா (32). பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அர்ச்சனா (30)  தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார் . பிரசன்னாவின் தாய் ரேவதி (59) இவரும் அவர்களுடனே வசித்து வந்தார்.

இந்நிலையில் மூவரும் வழக்கமான பணி முடிந்து இரவு படுக்கைக்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது உயர் மின் அழுத்தம் காரணமாக  ஃப்ரிட்ஜ்   கம்ப்ரெசர் திடீரென வெடித்து தீப்பற்றியுள்ளது.

தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளது. இதில் மின்சாரம் தடைப்பட்டு அறை முழுவதும் புகை மூட்டமாகியுள்ளது. இதனால் உறக்கத்திலிருந்தவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு  வெளியேற முயன்றுள்ளனர்.

பிரசன்னா இருட்டில் தட்டுத் தடவி ஹால் வரை வந்தவர் மூச்சுத்திணறல் காரணமாக அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது தாயாரும் ஹாலில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மனைவி அறைக்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.

மூவரும் உயிரிழந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் வீட்டு வேலை செய்யும் பெண் வழக்கம்போல் வந்துள்ளார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டினுள் இருந்து புகை வந்தது. அதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்துள்ளார்.

உள்ளே இறந்த நிலையில் மூன்று பேரும் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும் சேலையூர் காவல் நிலையத்துக்கும்  தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாதாரண கு ஃப்ரிட்ஜ்   விபத்தில் கணவன், மனைவி, மாமியார் மூவரும் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துடன் உயிரிழந்தது ஊடகத்தில் பணியாற்றும் சக செய்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து குறித்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்  உடற்கூறு அறிக்கை தடயவியல் நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT