தமிழகம்

ஊரக உள்ளாட்சிகளுக்கான இட ஒதுக்கீடு விவரம் வெளியீடு: நீலகிரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கி ஆணை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய ஊரக உள்ளாட்சிகளுக்கான இட ஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், அம்மாதம் உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, அதன் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு உள்ளாட்சியிலும் உள்ள வார்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மகளிர் (பொது) ஆகியோருக்கான விவரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. முதலில் சென்னை மாநகராட்சிக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் வெளி யிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 561 பேரூராட்சி களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப் பட்டன. அதன் தொடர்ச்சியாக ஊரக உள்ளாட்சி களான 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 385 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகள், 31 மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்கள் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன.

மொத்தம் உள்ள 31 மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிகளில் நீலகிரி மாவட்டக்குழு தலைவர் பதவி பழங்குடியினருக்கு (பொது) ஒதுக்கப் பட்டுள்ளது. 4 இடங்கள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கும், 4 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும் (பொது), 12 இடங்கள் மகளிருக்கும் (பொது), 10 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT