12-ம் வகுப்பு பொதுத்தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை, காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "12-ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் மகாகவி பாரதியார் தலைப்பாகைக்கு காவி வண்ணம் பூசி இருப்பது திட்டமிட்ட உள் நோக்கத்துடன் திணிக்கப்பட்ட ஒன்று.
பாரதியார் ஒரு சனாதன எதிர்ப்புப் போராளி. அவரை இழிவு படுத்தும் வகையில் தலைப்பாகைக்கு காவி பூசியிருப்பது கண்டனத்துக்குரியது.
வெள்ளை நிறத்தில் தலைப்பாகை அமையும் வகையில் அட்டைப் படத்தைத் திருத்த வேண்டும்.
அதேபோல், 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாற்றுப் பாடங்களை தமிழக அரசு நீக்கி இருப்பது கண்டனத்துக்குரியது" என்றார்.
காயிதே மில்லத்துக்கு புகழாரம்:
காயிதே மில்லத் விதைத்த மத நல்லிணக்க மாண்புகளால் மத வெறி, சாதி வெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் உறுதி செய்துள்ளது என்று திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்..
தமிழக முதல்வர் பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக பாடத் திட்டங்களில் அறிவிக்க வேண்டும் என்று ட்வீட் மூலம் பிரதமர் மோடிக்கு விடுத்திருந்த வேண்டுகோள் குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் இந்தியை 3-வது மொழியாக ஏற்றுக்கொள்ள உடன்படுகிறார் என்பதை முதல்வர் இதன்மூலம் மறைமுகமாக அறிவிக்கிறார்.
மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதிமுக அரசு மோடி வழியில் செயல்படுகிறதா? ஜெயலலிதா வழியில் சுதந்திரமாகச் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் செயல்படுகிறது" என்றார்.
ட்வீட்டை நீக்கிய முதல்வர்..
இதற்கிடையில், முதல்வரின் ட்வீட் மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பதுபோல் இருப்பதாக தலைவர்கள் தொல்.திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கண்டனம் தெரிவித்த நிலையில் முதல்வர் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.