தமிழகம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்: அரசு மரியாதையுடன் நாளை உடல் அடக்கம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78.அரசு மரியாதையுடன் உடல், அவர் பிறந்த கிராமத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஆலத்தூரில் கடந்த 1941–ம் ஆண்டு பிறந்தவர் ஜானகிராமன். தொழில் நிமித்தமாக சென்னை சென்றபொழுது திமுக தலைவர் கருணாநிதியிடம் பணியாளரானார். கருணாநிதி, முரசொலி மாறனுக்குக் கார் ஓட்டியதன் மூலம் திமுகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

கடந்த 1985-ம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தார். 1988-ல் தி.மு.க. புதுச்சேரி மாநில கழகப் பொருளாளராக பொறுப்பேற்றார். 1990-ல் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அதே நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

கடந்த 1993-ம் ஆண்டு ஒன்றுபட்ட புதுச்சேரி மாநில திமுக மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வென்று முதல்வரானார். அவர் 2000-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் 1985, 90, 91, 96 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதியாகத் தேர்வானவர் ஜானகிராமன். புதுச்சேரி திமுகவில் பொருளாளராகவும், 1993 முதல் 2012 வரை மாநில அமைப்பாளராகவும் இருந்தார். அத்துடன் சட்டப்பேரவை கொறடா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார். தற்போது திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.

புதுச்சேரியில் முதன் முதலாக தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை துவக்கியது, அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்தது, அரசு கோப்புகளை தமிழில் தயாரிக்க உத்தரவிட்டது உட்படப் பல பணிகளைத் தனது காலத்தில் செய்துள்ளார்.

உடல் நிலை நலிவுற்ற நிலையிலும் பல நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். ஒரு கட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை இறந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் திமுகவின் அனைத்து நிகழ்வுகளும் புதுச்சேரியில் ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நாராயணசாமி அஞ்சலி

ஜானகிராமனின் உடல் புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர் நாராயணசாமி ,புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்" என தெரிவித்தார்.

ஸ்டாலின் அஞ்சலி

நாளை (11.06.2019) காலை 7.00 மணிவரையில் ஜானகிராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்பு மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் காலை 9.30 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

SCROLL FOR NEXT