தமிழகம்

சைக்கிள் ஓட்டியால் விபரீதம்; லாரியில் சிக்கி இளைஞர் பலி: கண்டுகொள்ளாமல் கடந்த வாகன ஓட்டிகள்

செய்திப்பிரிவு

சென்னை கேளம்பாக்கம் அருகே சைக்கிளில் சென்ற நபரின் முட்டாள்தனத்தால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் லாரியில் சிக்கி பரிதாபமாகப் பலியானார்.

சாலையில் என்னதான் கவனமாக சென்றாலும் அடுத்தவர் செய்யும் தவறுகளால் ஒழுங்காக வாகனம் ஓட்டிச் செல்பவர் உயிரிழக்கும் சூழல் சமீபகாலமாக ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு சென்னை அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சாலையில் திடீரென கார் கதவை திறக்க, பின்னால் பைக்கில் வந்த மாணவர் அடிபட்டுக் கீழே விழுந்து பலியானார்.

கடந்த மாதம் சாலையில் ஓரமாக நிற்கும் ஒரு மேக்சிகேப் வாகனத்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக கதவைத் திறக்க பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாறி விழ, பின்னால் வந்த லாரியின் சக்கரம் இருவர் மீது ஏறியதில் இருவரும் பலியானார்கள்.

இதேபோன்றதொரு சம்பவம் நேற்று நடந்தது. சைக்கிள் ஓட்டி ஒருவர் சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்ததில் தடுமாறி விழுந்த தனியார் பள்ளி ஊழியர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சமபவ இடத்திலேயே அவர் பலியானார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள கண்ணாகபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (29). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் வழக்கம்போல் தனது  இருசக்கர வாகனத்தில் பணிக்குப் புறப்பட்டார்.

கேளம்பாக்கம் அருகே படூர் என்ற இடத்தில் சாலையின் இடதுபுறமாக பிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் வலதுபுறம் ஆந்திராவிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே திடீரென ஒரு சைக்கிள் ஓட்டி நுழைந்தார். நேராக பிரபுவின் மோட்டார் சைக்கிள் மீது சைக்கிள் ஓட்டி மோத இருவரும் சாலையில் விழுந்தனர்.

இதில் சாலையில் விழுந்த பிரபு மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பிரபு பலியானார். லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டார்.

இந்த விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

போலீஸாருக்கு சைக்கிள் ஓட்டியினால் விபத்து ஏற்பட்டது என்ற தகவலை பொதுமக்கள் யாரும் சொல்லவே இல்லை. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி பார்த்தபோது போலீஸார் திடுக்கிட்டுப் போயினர்.

லாரி சாதரணமாக அதன்வழியில் செல்ல, பிரபு அதன் பக்கத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென குறுக்கே சைக்கிள் ஓட்டி புகுந்து பிரபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோத, அவர்கள் இருவரும் கீழே விழுவதும், பிரபுவின் தலை மீது  லாரியின் சக்கரம் ஏறுவதும் பதிவாகி இருந்தது.

பிரபு உடனடியாக உயிரிழக்க, சைக்கிளை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய நபர் மெதுவாக எழுந்து பிரபுவின் உடலைப் பார்த்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு ஒன்றுமே நடக்காததுபோல் தப்பிச் செல்கிறார். இதை அருகில் நின்று பார்க்கும் ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர், அதில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தினர் யாரும் தடுக்காமல் எனக்கென்ன என்று கடந்து செல்கிறார்கள்.

தப்பி ஓடிய சைக்கிள் ஓட்டி யார் என போலீஸார் தேடி வருகின்றனர். விபத்து ஏற்பட்டால் அதுகுறித்த தகவல் தரும் யாரையும் சாட்சிக்கு அழைத்து துன்புறுத்த மாட்டோம் என போலீஸார் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

அதையும் தாண்டி ஒரு மனிதனின் அலட்சியத்தால் அப்பாவி ஒருவர் உயிரிழந்தது அப்பட்டமாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் கடந்து சென்றது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

SCROLL FOR NEXT