புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக, வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "புதுவை முன்னாள் முதல்வரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக் குறைவு காரணமாக, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்கிற செய்தி கேட்டு பெரிதும் துயரம் கொண்டேன்.
புதுவையின் நெல்லித் தோப்புப் பகுதியில் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், புதுவையின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், புதுவை முதல்வராகவும் பணியாற்றிய ஜானகிராமன், மாநில வளர்ச்சிக்காகவும், புதுவை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது தொண்டின் சிறப்பை பாராட்டக்கூடிய வகையில், 2005 ஆம் ஆண்டில் கருணாநிதி, திமுகவின் சார்பில் 'பேரறிஞர் அண்ணா விருதி'னை வழங்கி கவுரவப்படுத்தினார்.
புதுவை திமுகவின் பொருளாளராகவும், அமைப்பாளராக சிறப்பாகப் பணியாற்றிய ஜானகிராமன் 'உழைப்பின் சின்னம்' என்று கருணாநிதியால் பாராட்டப் பெற்றவர்.
ஜானகிராமன், திமுக புதுவையில் வலுப்பெற முனைப்புடன் பாடுபட்டவர் ஆவார். என் மீது அளவற்ற பாசம் கொண்டு, பலமுறை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து உபசரித்தும், கழக வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளில் என்னை அழைத்து உரையாற்றச் செய்தும் மகிழ்ச்சிகொண்டவர் ஆவார்.
புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைந்திடவும், டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம் அமைந்திடவும், அரசுக் கோப்புகளை தமிழ் மொழியில் உருவாக்கிப் பயன்படுத்தவும் ஜானகிராமனின் அரசு காரணமாக இருந்தது.
கடுமையான உழைப்பினாலும், சிறந்த அணுகுமுறையாலும், திமுக வளச்சிக்கும், புதுவை வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி மறைந்துள்ள ஜானகிராமனை இழந்து துயருற்று இருக்கும் திமுக தோழர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த ஆர்.வி.ஜானகிராமனின் இறுதி நிகழ்வில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், புதுவை அமைப்பாளர் கபிரியேல் மற்றும் மதிமுகவினர் பங்கேற்பார்கள்" என, வைகோ தெரிவித்துள்ளார்.