தேனி எஸ்.பி.பாஸ்கரன் தாக்கப்பட்ட வழக்கில் 200 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிக்க வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 350 போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் மற்றும் சருத்துப்பட்டி கிராம மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக கடந்த வாரம் இருபிரிவினரும் தனித்தனியே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிரஞ்சீவி என்பவர் மோட்டார் சைக்கிளில் சருத்துப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். விடுமுறையில் இருந்த இவர் தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் நிலைதடுமாறி விழுந்தார்.
ரத்தக்காயத்துடன் வந்த இவரை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள்தான் தாக்கி உள்ளனர் என்ற தகவல் பரவியது. இவற்றை பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பரப்பினர். இதனால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்பி.பாஸ்கரன் தேவதானப்பட்டியில் இருந்து தேனிக்கு வந்து கொண்டிருந்தார். மறியல் நடைபெறுவதை அறிந்து விசாரணையில்இறங்கினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது கற்களை வீசினர்.
இதில் அவரது இடது புருவம், கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் இருந்த ஆயுதப்படை போலீஸார் அன்பழகன், பட்டாலியன் போலீஸார் சக்திவேல், சவுந்திரவேல், முத்தீஸ்வரன், ராஜீவ்குமார் உள்ளிட்ட 10 பேரும் காயமடைந்தனர்.
எஸ்.பி தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு மதுரை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், திண்டுக்கல் சரக டிஐஜி.ஜோஷி நிர்மல்குமார், திண்டுக்கல், மதுரை எஸ்பி.க்கள் சக்திவேல், மணிவண்ணன் ஆகியோர் விரைந்தனர்.
இப்பகுதியைச் சேர்ந்த 200பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் வட்டாட்சியர் சுந்தர்லால் புகாரின் பேரில் 147(அதிகமாக கூடுதல்), 148(ஆயுதம் வைத்திருத்தால்), 323(கைகளால் தாக்குதல்), 427(பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல்), 353(அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், 332(பீதி ஏற்படுத்துதல்) உள்ளிட்ட 10பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்களை, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இருந்து 350 போலீசாரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 250போலீசாரும் தற்போது இந்த ஊர்களின் 15இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம்பட்ட எஸ்பி.பாஸ்கரனிற்கு நரம்பில் வெட்டுப்பட்டு தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் மதுரை அரவிந்த் கண் மருத்துவமைனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் எஸ்பி.சக்திவேல் தேனியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
காயம்பட்ட மற்ற போலீசார் க.விலக்கு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்கரை போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.