ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைத்த நீண்ட வாதத்துக்குப் பின் அவரையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட்ஆலை குறித்த வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்க்கக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த கோரிக்கை குறித்து, கருத்துகளைக் கூறுவதற்கு, நீதிபதிகள் வாய்ப்பு அளித்தனர்.
அப்போது வைகோ கூறியதாவது:
“இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நாளில் இருந்து நான் அதை எதிர்த்துப் போராடி வருகின்றேன். மக்களைத் திரட்டி அறப்போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன.
1997 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். எண். 5769-1997அதன் மீதான விசாரணையின்போது, அரசியலுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ நான் இந்த ஆலையை எதிர்க்கவில்லை.
மக்கள் நலனுக்காக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக, தூத்துக்குடி வட்டார மக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு, இந்த அறப்போராட்டங்களை நடத்திவிட்டு இந்த வழக்கு மன்றத்திற்கு வந்து இருக்கின்றேன் என்று சொன்னேன்.
அப்போது, தலைமை நீதிபதியாக இருந்த லிபரான் குறுக்கிட்டு, நீங்கள் சுயநலத்திற்காகப் போராடவில்லை. உங்களுடைய நேர்மை, நாணயம், உண்மை, எல்லோரும் அறிந்த ஒன்றுதான் எனக் குறிப்பிட்டார்.
எனது ரிட் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எலிபி தர்மாராவ், நீதியரசர் பால் வசந்தகுமார் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தடை ஆணை பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்கி வந்தது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அனைத்து அமர்வுகளிலும் தவறாமல் பங்கேற்று, என் கடமையைச் செய்து வந்திருக்கின்றேன்.
அந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2013 மார்ச் 23 ஆம் நாள் அன்று காலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறி, தூத்துக்குடி நகருக்குள் பரவியது.
அதனால், சாலைகளில் நடந்து சென்றுகொண்டு இருந்தவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தனர். தூத்துக்குடி நகரமே பதற்றத்திற்கு உள்ளானது. மக்கள் போராட்டம் வெடித்தது. எனவே, 29-ம் தேதியன்று அந்த ஆலையை மூடுவதற்கு, தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது.
அதன்பிறகு, ஏப்ரல் 2 ஆம் நாள் அன்று, உச்ச நீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பு அளித்து விட்டது. இதன்பிறகு, தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் நானும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.
வழக்கு நடந்துகொண்டு இருந்தபோது திடீரென ஒருநாள், தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்தவராக, என்ன காரணமோ தெரியவில்லை; இந்த வழக்கை, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றி விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
அங்கேயும் நான் சென்று வாதாடினேன். ஆனால், ஆலையைத் திறக்கலாம் என, டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து இரண்டு மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அங்கே வழக்கு தாக்கல் செய்தது.
இந்தச் சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள், தூத்துக்குடி மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணி சென்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து வெளியேறி கோவில்பட்டிக்குச் சென்று விட்டார்.
முன்பே திட்டமிட்டபடி, காவல்துறையினர் பொதுமக்கள் மீது கண்மண் தெரியாமல் துப்பாக்கிகளால் சுட்டனர். ஒரு பள்ளி மாணவி உட்பட 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
அதனை எதிர்த்து, பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கிலும் நான் பங்கேற்றேன். நீதிபதி தருண் அகர்வால், ஆலையைப் பார்வையிட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு நடத்திய அனைத்து விசாரணைகளிலும் நான் பங்கேற்றேன்.
இதன்பிறகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடவேண்டும் எனப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.
அப்போது நீதிபதி சிவஞானம் குறுக்கிட்டு, உங்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா? என்று கேட்டார்.
வைகோ: ஆம்; வழக்கு எண் தரப்பட்டது.1582/2019. அந்தத் தீர்ப்பின் முதல் பக்கத்திலேயே இருக்கின்றது. பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இனி இந்த வழக்கு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு கூறியது.
இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே நான் பங்கேற்று வருகின்றேன். பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வு 2013 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் எனப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதனை எதிர்த்து 2 மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.
அதுபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிலும் என்னை ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு வைகோ வாதாடினார்.
அதன்பிறகு, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி, இந்த வழக்கில் தமிழக அரசாங்கத்திற்கு உதவுகின்ற வகையில் வைகோ வாதங்களை எடுத்து வைக்கலாமே தவிர, அவரை ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என்றதுடன், சினிமாத் துறை தொடர்பான வழக்கு ஒன்றில் இதுபோன்ற தீர்ப்பு வந்திருப்பதாகச் சுட்டிக்காட்டி வாதாடினார்.
அப்போது வைகோ எழுந்து, சில உண்மைகளை நான் இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கின்றேன். தமிழ்நாடு அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, அவர்களுடன் கை கோத்துக்கொண்டு செயல்பட்டு வந்தன.
அதன் விளைவாகத்தான், அங்கே பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். 10 லட்சம் மக்களுடைய உடல் நலன் தொடர்பான பிரச்சினை இது. அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் அடிப்படையில், மக்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு வழக்குரைஞரே அந்தக் கருத்தை இங்கே குறிப்பிட்டார். அந்தக் கருத்தின் அடிப்படையில், தூத்துக்குடி வட்டாரத்தில் வாழ்கின்ற மக்களின் உயிருக்கு உத்தரவாரம் வேண்டும். தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த மண்ணில் 13 பேர் சிந்திய ரத்தத் துளிகள் இந்த நீதிமன்றத்தில் நீதி கேட்கின்றன.
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான், தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இயங்கி வந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளை என்னால் சொல்ல முடியும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருந்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுக்க முழுக்க ஆதரவாகவே இருந்தது.
தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞரும் அதை ஆதரித்துப் பேசியபோது, உச்ச நீதிமன்ற நீதியரசர் கோகலே, நீங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்காக வாதாடும் வழக்கறிஞரா? அல்லது, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்காக வழக்காடும் வழக்கறிஞரா? என்று கேட்டார்.
இந்த நிலையில், தமிழக அரசுக்கு உதவியாகத்தான் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வழக்குரைஞர் மாசிலாமணி கூறியது ஏற்கத்தக்கது அல்ல. அதுமட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த இரண்டு வழக்குகள் ஐந்து ஆண்டுகளாக விசாரணையில் இருக்கின்றன என்பதை அங்கே சுட்டிக்காட்ட, தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தவறி விட்டன.
வேண்டும் என்றே அவர்கள் அதைத் தவிர்த்து விட்டார்கள்.நான் அதைச் சுட்டிக்காட்டியபிறகுதான், அந்த வழக்குகளையும் இணைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தீர்ப்பு அளித்து இருக்கின்றார்.
எனவே, இந்த வழக்கில், என்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு, வைகோ தமது வாதங்களை எடுத்து உரைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் வைகோவையும் ஒரு தரப்பாகச் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.