தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சேலம் நாடக, நடிகர் சங்கத்தில் தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் விதமாக நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று சேலம் வந்தார். இங்கு நடந்த உறுப்பினர்களுடனான கூட்டத்துக்கு நாடக நடிகர் சங்க தலைவர் அக்கியண்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடிகர் கருணாஸ் பேசியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி 6 மாதத்தில் முடிவடையும். நலிவடைந்த நாடக நடிகர்களுக்கான உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணி மீண்டும் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும்.
இங்குள்ள நலிவடைந்த உறுப்பினர்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுப்பதாக கடந்த முறை கூறியிருந்தேன். இடையில் பல பின்னடைவு நிகழ்வுகள் நடந்துவிட்டன. நிச்சயம் 3 சென்ட் நிலம் அளிப்பேன். அதேபோல, வயதான நாடக நடிகர்களுக்கான முதியோர் இல்லம் ஏற்படுத்தி தருவேன் என கடந்த தேர்தலில் கூறியிருந்தேன். தற்போது, திண்டுக்கல்லில் உள்ள எனது சொந்த நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறேன். அதில் தென்னிந்திய நாடக நடிகர்கள் முதியோர் இல்லம் கட்ட இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.