நாளை நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிகள் குறித்து நீதிபதி கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்த சங்கங்களின் பதிவாளர் தேர்தல் ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடைக்கேட்டு விஷால் தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டப்படி ஜூன் 23 அன்று நடத்த அனுமதி அளித்தார்.
நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் வாக்கு பெட்டிகளை பாதுகாத்து வைக்கவும் உத்தரவிட்டார்.
மேலும், தேர்தலுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நிலுவையில் உள்ளதால், எந்த இடத்தில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து அந்த நீதிபதியிடம் சென்று முறையிட்டு இடத்தை இறுதி செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இடம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தி உத்தரவிடக்கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடிகர் சங்கத்தரப்பு முறையிட்டதன்பேரில் வழக்கை தனது இல்லத்தில் மாலையில் நீதிபதி விசாரித்தார்.
அப்போது நடிகர் சங்கத்தரப்பில் ஆர்.கே.சாலை ஆழ்வார்ப்பேட்டை அருகே உள்ள செயிண்ட் எப்பா பள்ளியில் ( கடந்த முறையும் இங்குதான் நடந்தது) நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேர்தல் நடைமுறை, பாதுகாப்பு குறித்து உத்தரவுகளை பிறப்பித்தார்.
நீதிபதியின் உத்தரவு வருமாறு:
* தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த உத்தரவு.
* துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
* பள்ளியின் வெளியே கூட்டம் ஏற்படாமலும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடிகர் சங்கத்தினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அடையாள அட்டை இல்லாத யாருக்கும் அனுமதி இல்லை.
* கார்கள் பள்ளி மைதானத்துக்குள் நிறுத்தப்படவேண்டும் அல்லது, இறக்கிவிட்டு சென்றுவிடவேண்டும்.
* காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.
* நடிகர் சங்க தேர்தலை மயிலாப்பூர் துணை ஆணையர் பாதுகாப்பாக நடத்தவேண்டும்.
* தேர்தல் நடத்தும் அதிகாரி தவிர தேர்தல் நடவடிக்கையில் யாரும் தலையிடாமல் மயிலாப்பூர் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
* தேர்தல் நேரத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மாலை 5 மணிக்குமேல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது.
* தேர்தல் முடிந்தப்பின்னர் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக நடிகர் சங்க கட்டிடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டப்பட்டு, சீலிடப்படவேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி தவிர வேறு யாரும் இதில் முடிவெடுக்ககூடாது.
* தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டிய ஏற்பாடுகளை காவல் துணை ஆணையர் செய்ய வேண்டும்.
* தேர்தலின் போது அமைதியை குலைக்கும் யார்மீதும் துணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட கடுமையான வழிகாட்டுதல்களை நீதிபதி பிறப்பித்துள்ளார்.