பிஹாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, இத்தகைய துக்ககரமான நிகழ்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகமது ஷாஃபி தனது அறிக்கையில், ''மாநில நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணங்களைத் தவிர்த்திருக்க இயலும். ஊட்டச்சத்து இல்லாத உணவுகளால் ஒவ்வொரு நாளும் பெரியவர்களும், சிறுவர்களும் இறப்பது நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டதோடு நாட்டின் தீர்க்கமுடியாத பிரச்சினையாக விளங்குகிறது. நாட்டில் மருத்துவமனைகளின் நிலை படுமோசமாக இருப்பதும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததுமே இத்தகைய அவலநிலைக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. மாநில அரசு நிர்வாகம் இத்தகைய அசம்பாவிதம் நிகழும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
உணவுக்கான உரிமையும், உடல் வளர்ச்சியைப் பராமரித்தலும் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகும். ஒரு நபரோ அல்லது சிறுவரோ சத்து இல்லாத உணவின் காரணமாக மரணத்தைத் தழுவுகிறார்கள் என்றால், அது அரசு நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணமாகும். அடிக்கடி நிகழும் இத்தகைய அசம்பாவிதங்களுக்கு அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும், மக்கள் பணியாளர்கள் என்பதை மறந்த அவர்களின் காலனியாதிக்க எஜமான மனப்பான்மையும் காரணம். இத்தகைய அதிகாரவர்க்க மனநிலையில் உள்ளவர்களை பணிசெய்யத் தூண்டுதலாக இருக்க அரசியல்வாதிகளும் தவறிவிட்டனர்.
வளர்ச்சியை நோக்கிச் செல்வதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிதிஷ் குமாரின் அரசு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிஹார் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்று எழுபதாண்டுகள் கடந்தும், மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்ற இத்தகைய அவலநிலை நீடிப்பது வருந்தத்தக்கதாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அரசு அதிக அக்கறை காட்டத் தவறிவிட்டது தெளிவாகிறது.
மிகவும் பின்தங்கிய சில ஆப்பரிக்க நாடுகளைக் காட்டிலும் இந்தியா சுகாதாரத்துறையில் பின்தங்கியிருப்பது வேதனையளிக்கிறது. சுகாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கத் தவறியதற்கு மத்திய மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்'' என்று முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார்.