தமிழகம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்திப் பேசினார்.

மாநிலங்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,"தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏற்கெனவே இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப  மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு தமிழக கிராமப்புற மாணவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேரத் தடையாக இருக்கிறது.  நீட் தேர்வு தோல்வியால் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" எனப் பேசினார்.

2019 நீட் தேர்வில் தமிழகத்தின் நிலை..

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 14 நகரங்களில்  தேர்வு நடைபெற்றது.  தமிழகத்தில் மட்டும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். இதில், சுமார் 7 லட்சம் பேர் அதாவது 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அதேவேளையில் அண்டை மாநிலங்களான கேரளாவில் 66.59% , கர்நாடகாவில் 63.25% மாணவர்கள் முறையே தேர்ச்சி பெற்றனர். ஆந்திரப் பிரதேசம் 70.72 சதவீத தேர்ச்சியுடன் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) திமுக எம்.பி. திருச்சி சிவா மத்திய அரசை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT