தமிழகம்

எட்டு வழிச்சாலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிகமானது: அமைச்சர் ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

எட்டு வழிச்சாலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிகமானதுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட் டத்தை ரத்து செய்தும் நில ஆர்ஜிதம் செய்தது செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது, திட்ட அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பாகவே நில ஆர்ஜிதப் பணிகளை மேற்கொண்டது எப்படி எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு நாங்கள் தடை விதிக்கப் போவதில்லை. மாறாக சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பாகவே நில ஆர்ஜிதப் பணிகளை மேற்கொண்டது எப்படி என்பது எங்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. இதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது'' என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் எதிர்மனுதாரர்களாக உள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என அனைவரும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் எட்டு வழிச் சாலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுகவில் உள்ள ஒருவரைக் கூட திமுக தலைவர் ஸ்டாலினால் விலைக்கு வாங்க முடியாது.

எட்டு வழிச் சாலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு தற்காலிகமானது. உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்கும். உரிய சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் கொடுப்போம்.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன். எந்த நிலையிலும் விவசாயிகளின் நலனை முழுமையாகப் பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு நிச்சயம் எடுக்கும்''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT