தமிழகம்

கோவையில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

கா.சு.வேலாயுதன்

தமிழகம், புதுச்சேரியில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடுவது உறுதி என்றே தெரிகிறது.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள் ஒதுக்கப்படலாம். அதுவும், ஒதுக்கப்படும் தொகுதியை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதாம். பழைய எம்.பி.க்களில் தம்பிதுரை, செம்மலை ஆகியோரைத் தவிர வேறு யாருக்கும் சீட் கிடையாது என்பதும் உறுதியாகிவிட்டது என்று தெரிவிக்கின்றனர் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்.

வரும் மக்களவைத் தேர்தலில் களத்தில் இறங்கப்போவது யார் என்று தலைமை முடிவு செய்து பட்டியலும் தயாரித்து விட்டதாகவே பேசிக்கொள்கின்றனர் அதிமுக பிரமுகர்கள். போட்டியிடுவோரின் வெற்றிவாய்ப்பு குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் அலசப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கட்சியின் சீனியர்கள் சிலர் கூறியது:

தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ அறிவிக்கப்பட்டுவிடும். அதற்குள் பட்டியல்களை இறுதி செய்துவிடும் நோக்கில்தான் அதற்கான முன் னேற்பாடுகளில் முன்னதாகவே முதல்வர் இறங்கியிருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்க பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் கொண்ட நால்வர் அணியை சுற்றுப்பயணம் செய்யவைத்தார். அந்த அணி ஒவ்வொரு தொகுதி வாரியாக அந்தந்த மாவட்டச் செயலாளர்களை கலந்தாலோசித்து தொகுதிக்கு 3 பேரை சிபாரிசு செய்து பட்டியல் தயாரித்துள்ளதது.

அதுதவிர அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக தொகுதிக்கு 3 பேர் கொண்ட பட்டியல் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு உளவுத்துறை மூலம் விசாரிக்கப்பட்டது. அதில் என்ன நடந்ததோ? நீலகிரி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்கள் உட்பட பலர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் சீட் கேட்பவர்கள் தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்தது. எனவே 40 தொகுதிகளுக்கும் போட்டி போட்டுக்கொண்டு பணம் கட்டி விண்ணப்பித்தனர். மொத்தம் 5167 விண்ணப்பங்களில் சுமார் ஆயிரம் பேர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் அவர்தம் வாரிசுகளும்தான்.

இருந்தாலும், சராசரியாக ஒரு தொகுதிக்கு 100 முதல் 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் யாருக்கு சீட் கிடைக்கிறதோ இல்லையோ இந்த முறை பழைய எம்.பிக்கள் யாருக்கும் சீட் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அந்த அளவுக்கு தற்போதுள்ள

எம்.பி.க்கள் மீது உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். இந்த முறை ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதால் அவர் நிச்சயம் போட்டியிடுவார். அவர் போட்டியிடுவதை மக்கள் எப்படி விரும்புகிறார்கள், வெற்றிவாய்ப்பு எப்படி என்பது குறித்து சில தொகுதிகளை மட்டும் ரகசிய போலீஸ் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியத் தொகுதியாக கோவை உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை இரட்டை இலை, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே போட்டியிட்டதில்லை.

கடந்த 2011 தேர்தலுக்கு முன் சுணங்கிக்கிடந்த கட்சிக்கு பேரெழுச்சி கொடுத்த பொதுக்கூட்டம் நடந்ததும் இங்கேதான். எனவே, கோவை தொகுதி குறித்து சாதகமான தகவல்கள் கட்சியின் தலைமைக்குச் சென்றுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். இதனால், தொண்டர்கள் மத்தியில் இப்போதே உற்சாகம் தொடங்கிவிட்டது.

SCROLL FOR NEXT