15 ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி விதிக்கப்படுவதாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வையொட்டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தொழிற்பெருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி நகர மயமாக்குதலுக்கு மிக முக்கிய பங்கேற்கின்றன. நகர மயமாக்கலால் மக்கள் தொகை பெருக்கம் நகரங்களில் அதிகரிக்க காரணமாகின்றன. பொருளாதார பெருக்கம் நகரங்களின் வாகன பெருக்கத்திற்கு வழிகோலுகிறது.
பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு சுமார் 70%-க்கு மேல் வாகன புகையால் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாட்டின் தாக்கம் வானிலையில் ஏற்படும் நிகழ்வுகளால் அது ஏற்படும் இடத்தினில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் அதன் தாக்கம் ஏற்பட காரணமாகிறது.
எனவே காற்றுமாசினை கட்டுப்படுத்துதல் பெரும் சவாலான பணியாகவே உள்ளது. உலகளவில் காற்று மாசுபாட்டில் முன்னணியில் உள்ள 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெரு நகரங்களில் காற்று மாசில் 2.5 மைக்ரான் மற்றும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது.
கடந்த 2016-ல் மட்டும் உலகம் முழுக்க ஏற்பட்ட இறப்புகளில் 4.2 மில்லியன் அளவுக்கு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. காற்று மாசு இறப்புகள் பெரும்பாலும் இதய நோய், பாரிசநோய் மற்றும் சுவாச கோளாறு நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோயாலும் ஏற்படுகிறது.
இதன் தாக்கத்தை கருத்தில் கொண்டே இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5, 2019-ன் மைய பொருளாக காற்றுமாசு கட்டுப்பாடு உலகம் முழுக்க நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்றவைகளை விட சென்னை மாநகரின் காற்று மாசுப்பாடு குறைந்தே காணப்படுகிறது. காற்று மாசுபாட்டை கண்டிறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய தேசிய காற்று தர ஆய்வு திட்டத்தின் கீழ் 8 இடங்களில் காற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு காற்று மாசுகளான கந்தகடை டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, நுண்துகள் 10 மைக்ரான் மற்றும் 2.5 மைக்ரான் ஆகியன அளவிடப்பட்டுவருகின்றன.
இத்தகைய கண்கானிப்பின்படி சென்னை நகரில் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியன ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குட்பட்டே காணப்படுகின்றன. மேலும் 2.5 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் ஆண்டு சராசரி அளவும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குட்பட்டே காணப்படுகின்றன.
எனினும் 10 மைக்ரான் அளவிலான மிதக்கும் நுண்துகள்களின் அளவீடுகனின் ஆண்டு சராசரி அளவுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும் இதற்கான காரணங்கள் சென்னை நகரில் பெருகிவரும் வாகனங்களால் வெளியிடப்பட்டு புகை மற்றும் வளர்ச்சி திட்டங்களின்பால் நடைபெறும் கட்டுமான பணிகள் ஆகியனவும் மற்றும் சாலைகளில் வாகன மற்றும் பாதசாரிகளின் பயன்பாட்டால் மறு சுழற்சியினால் ஏற்படும் துகள் மாசுகள் முக்கிய காரணங்களாகும்.
வாகனப்புகையை கட்டுப்படுத்த தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக:
பாரத் நிலை – 4 அளவுக்குட்பட்ட வாகனங்கள் மட்டுமே தமிழகமெங்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பெண்சீன் குறைக்கப்பட்ட, கந்தகம் குறைக்கப்பட்ட டீசல் மட்டுமே சென்னை மற்றும் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை நகரில் புதிதாக டீசல் ஆட்டோக்கள் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உரிமம் வழங்க/புதுப்பிக்க ஆட்டோக்கள் திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்குவதற்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
பழைய வாகனங்களை வயது வரம்பு நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழகத்தில் பழைய வாகன பயன்பாட்டை குறைக்கும் விதமாக தமிழக அரசு 15 ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையளவை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி அனைத்து ரக வாகனங்களும் வாகனப்புகை சான்று 6 மாதங்களுக்கொரு முறை பெறுவது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனப்புகை மாசு அளவை கணக்கிட்டு புகை தர சான்று வழங்க தமிழகமெங்கும் தமிழக அரசின் போக்குவரத்து துறை மூலம் சுமார் 370 தனியார் புகை பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றில் சுமார் 70 நிலையங்கள் சென்னை நகரில் இயங்கி வருகிறது.
மேலும் இத்தகைய தனியார் புகை சோதனை நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்க தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989 விதி எண்.116-ன் கீழ் தனியார் நிறுவனங்கள் புகை பரிசோதனை கருவிகளை பயன்படுத்தவும், பராமரிக்கவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட கல்வி தகுதி படைத்த, தனியார் நிறுவன புகைபரிசோதனை நிலைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 155 பயனாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பசுமை எரிபொருளான எல்பிஜி பயன்பாட்டை ஏற்படுத்த சென்னை நகரில் சுமார் 30 எல்பிஜி நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வாகனங்களில் சி.என்.ஜி பயன்பாடு தற்சமயம் சென்னை நகரில் இல்லை. இதுவரை சிஎன்ஜி எரிவாயுவை குழாய் மூலம் எடுத்துச் செல்ல சென்னை நகரில் வசதியில்லாததால் வாகனங்களில் சிஎன்ஜி பயன்படுத்த இயலவில்லை.
எனினும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு வழக்கில் சென்னை நகரில் சிஎன்ஜி பயன்பாட்டை ஏற்படுத்தும் சாத்திய கூறுகளை ஆராய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்டவைகள் மட்டுமின்றி பொதுமக்களின் பங்களிப்பு காற்று மாசு கட்டுப்படுத்த மிக அவசியம் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தீபாவளி மற்றும் போகி போன்ற பண்டிகை காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் காற்று மாசு பெருமளவு குறைந்தது என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே, வாழ்வு சிறக்க காற்று மாசினை அனைவரும் சேர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சியினை இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் மேற்கொள்ள சூளுரைப்போம்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.