தமிழகம்

மதுரைக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது: அமைச்சர் செல்லூர் ராஜூ

செய்திப்பிரிவு

மதுரைக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளிலேயே நேரடியாகக் குப்பைகளை சேகரிக்கும் வகையில் புதிதாக பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

அச்சேவையை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அவர், "மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, தூய்மையாக வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பன்மடங்கு முன்னேறி விடும்.

மேலும், அம்ருத் திட்டத்தின் கீழ், பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்படவுள்ளது. அவ்வாறு சுத்திகரிக்கும் தண்ணீரை மதுரை நகரில் மொத்தம் 44 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் நிறுவி அவற்றின் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டம் இருக்கிறது.

இத்திட்டம் அமலுக்கு வந்தபின்னர் மதுரைக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது" என்றார்.

ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர்..

திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா? குடிமராமத்துப் பணி என்ற திட்டமாவது அவர்கள் ஆட்சியில் இருந்ததா? ஆனால், இல்லாத பொய்யை எல்லாம் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைக் குறைகூற ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறினார்.

SCROLL FOR NEXT