தமிழகம்

இன்னோவா காரும் இணை பிரியா திருடர்களும்: ஒரே காரை திருடித் திருடி 3 பேருக்கு விற்ற 4 பேர்: சிசிடிவி காட்சியால் சிக்கினர்

செய்திப்பிரிவு

இணையதளம் மூலம் விளம்பரம் செய்து, ஒரு காரை விற்பனை செய்து, பின் வாங்கியவரிடம் இருந்து காரைத் திருடி மீண்டும் அதே காரை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் தணிகை. இவர் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். கார் வாங்க வேண்டும் என முடிவு செய்த தணிகை, இணையதளம் மூலம் கார் விற்பனைக்கு உள்ளதாகத் தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்துப் பேசினார்.

சத்தியா, ரிச்சர்ட், கணேசன், பாரதி ஆகியோரிடம் விற்பனைக்கு இருந்த இன்னோவா கார் ஒன்றை 7-ம் தேதி ரூ.6 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். கடந்த 10-ம் தேதி காரை எடுத்துக்கொண்டு கானாத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கினார். தான் வாங்கிய இன்னோவா காரை நிறுத்தி வைத்திருந்தார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தி இருந்த இன்னோவா காரைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தணிகை, வாங்கி நான்கு நாளில் கார் காணாமல் போய்விட்டதே என்ற கவலையுடன் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்தது. கானாத்தூர் சொகுசு விடுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு, அந்த நேரத்தில் அங்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களைச் சேகரித்த போலீஸார் அதை வைத்து விசாரணை செய்ததில் 2 நபர்களைப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து காரை மீட்டனர். பின்னர் தணிகையை காவல் நிலையத்துக்கு அழைத்த போலீஸார் கார் திருடர்களை  அவருக்குக் காண்பித்தனர். அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தணிகை, இருவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர்களும் அதிர்ச்சியால் முகத்தை மூடிக்கொண்டனர். அவரது அதிர்ச்சியைக் கண்ட போலீஸார் விவரம் கேட்டனர்.

''அந்தக் காரை விற்றவர்களே இவர்கள்தான் சார். இவர் பெயர் கணேசன். அவர் பெயர் பாரதி.  ரிச்சர்ட் மற்றும் சத்தியா எங்கே'' என தணிகை கேட்டுள்ளார்.

காரை விற்பதுபோல் விற்று பின்னர் இவர்களே திருடியுள்ளார்கள் என தணிகை கூற, மற்ற இருவரும் எங்கே என போலீஸார் கேட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

நான்குபேர் கொண்ட கும்பல் ஒரு இன்னோவா காரை வாங்கி அதன் சாவிகளை டூப்ளிகேட் செய்துகொண்டு ஒருவரிடம் விற்பனை செய்வது பின்னர் அவரிடமிருந்து திருடி இன்னொருவருக்கு விற்பது என மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முதல் உரிமையாளர் பெயரிலிருந்து காரை வாங்கியவர்கள் தங்கள் பெயருக்கு மாற்றாமல் வைத்திருந்தது இவர்களுக்கு வசதியாகிவிட்டது.

இதே காரை நெய்வேலியில் உள்ள நவநீதகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். பின்னர் நவநீதகிருஷ்ணனிடம் இருந்து திருடி வேலூரில் ஒருவருக்கு விற்றுள்ளனர். வேலூரில் வைத்திருந்த காரை விற்பனை செய்வதாக இணையதளத்தில் இந்த கும்பல் விளம்பரம் செய்தது.

மோசடி கும்பல் பற்றித் தெரியாமல் சினிமா தயாரிப்பாளரான தணிகை இவர்களை அணுக அவருக்கு இன்னோவா காரை 6 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். காரை வாங்கியவர் எங்கு செல்கிறார் என்று கண்காணித்து 4 நாட்களில் மாற்றுச் சாவி மூலம் அவரிடமிருந்து திருடி விட்டனர்.  

சினிமா தயாரிப்பாளரிடமிருந்து திருடிய அதே காரை வேறு ஒருவருக்கு விற்க இந்த கும்பல் முயற்சி செய்துள்ளது. அதற்குள் கானாத்தூர் போலீஸார் தனிப்படை அமைத்து நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.

ஒரு காரை  விற்பனை செய்து, பின் பணம் வந்தவுடன் அதே காரை ஆள் வைத்து திருடி மீண்டும் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்த இவர்கள் ஒரே காரை வைத்து 18 லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். மோசடி கும்பல், இது போன்று வேறு எத்தனை கார்களை எத்தனைப் பேருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே காரை மூலதனமாக்கி பலரை ஏமாற்றி விற்ற 4 பேரில் தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT