தமிழகம்

பிழைப்புக்கு இந்தி; அரசியலுக்கு இந்தி எதிர்ப்பா?- ஸ்டாலினை விமர்சித்த எச்.ராஜா

செய்திப்பிரிவு

பிழைப்புக்கு இந்தி, அரசியலுக்கு இந்தி எதிர்ப்பா என்று திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டம் அண்மையில் வெளியானது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் 'இந்தி' என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை திமுக கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்!

இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தங்களது வலுவான எதிர்ப்பை தெரிவிப்பார்கள்!'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள எச்.ராஜா, ''முதலில் சன்ஷைன் மாண்டிசோரி (Sunshine Montessori) சன்ஷைன் மேல்நிலைப் பள்ளி (Sunshine senior secondary school) மற்றும் கிங்ஸ்டன் (Kingston) ஆகிய பள்ளிகளை இழுத்து மூடி தமிழ் உணர்வு உங்கள் ரத்தத்தில் உள்ளது என்று நிரூபிக்கவும்.

வயிற்றுப் பிழைப்புக்கு இந்தி, அரசியலுக்கு இந்தி எதிர்ப்பா? இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT