தமிழகம்

தண்டனைக்கு தடை, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் இன்று மனு

இரா.வினோத்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார். அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் சசிகலா, சுதாகரன்,இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக அவரது வழக்கறிஞர் பி.குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள் ளனர். டெல்லி, மும்பையில் இருந்தும் சட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு சென்ற மூத்த‌ வழக்கறிஞர் பி.குமார் ஜெய லலிதாவை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் பி.குமார் கூறிய போது, ‘‘இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருக்கி றோம். இந்த மனுவை அவசர கால வழக்காக கருதி உடனடி யாக விசாரிக்குமாறு கோர இருக்கி றோம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆட்சேபக ரமான கருத்துகளை முன்வைத்து எங்களுடைய தரப்பின் வாதம் நடக்கும்''என்றார்.

ஜாமீன் கோரும் அதே வேளையில் பெங்களூர் சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஜெயலலிதாவுக்கு வழங்கியுள்ள தண்டனைக்கு தடை கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தீர்ப்புக்கு தடை கோரலாமா?

ஜாமீன் மனு,தண்டனைக்கு தடை கோரும் மனு ஆகியவற்றை தாக்கல் செய்யும் ஜெயலலிதா தரப்பு இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்வது குறித்தும் பரிசீலித்துள்ள‌னர்.

அதாவது நீதிபதி டி'குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கே தடை கோருவது. ஆனால் இந்த மனுவிற்கு உடனடியாக பலன் கிடைப்பது கடினம் என்று கூறுகிறார்கள்.

சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பும் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு தசரா திருவிழாவை ஒட்டி வருகிற 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT