வகுப்பறைக்கு வரும் குழந்தைகளின் தயக்கம் போக்க அரவணைத்து, கட்டித்தழுவி இயல்பான சூழலில் பாடங்களைக் கற்றுத் தருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை சுபாஷினி.
புதுச்சேரி அருகே நோணாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சுபாஷினி. அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், வகுப்பறை சூழலுக்கு ஏற்றவாறு மாணவர்களை எப்படி பழக்கப்படுத்துவது என்றும் யோசித்த சுபாஷினி, புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார்.
குழந்தைகள் காலையில் வகுப்பறைக்கு வந்தவுடன் வகுப்புகளை வித்தியாசமான முறையில் தொடங்குகிறார் ஆசிரியை சுபாஷினி. காலையில் வகுப்பறைக்குள் குழந்தைகள் நுழைந்தவுடன் அங்குள்ள கரும்பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் கட்டி அரவணைப்பது, நடனமாடுவது, கை தட்டுவது போன்ற படங்களை மாணவர்கள் தொட்டு தேர்வு செய்தவுடன் மாணவர்களுடன் இணைந்து நடனமாடியும், கட்டி அரவணைத்தும், விளையாட்டுகளுடன் உற்சாகமாக மாணவர்களை வகுப்புக்குள் வரவேற்று வகுப்பினைத் தொடங்குகிறார் சுபாஷினி.
இது தொடர்பாக ஆசிரியை சுபாஷினி கூறுகையில், "வகுப்பறைக்குள் மாணவர்கள் பயந்த சுபாவத்துடன் வருவதையும், மாணவர்கள் ஆசிரியர்கள் என்ற இடைவெளியைக் குறைக்க வேண்டுமென நினைத்தேன். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் அன்பும் அரவணைப்போடும் பழகுவது அவசியம்.
காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் பாடப் புத்தகங்களில் உள்ளதைப் பாடமாக எடுப்பதை விடுத்து, மாணவர்களுடன் நடனமாடி, அரவணைத்து விளையாட்டுடன் தொடங்குவதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை இது பெற்றுள்ளது. பள்ளிக்கு வருகை புரிய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அன்பும் அரவணைப்பும் கொண்ட கல்வியினால் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதுபோன்று அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செயல்பட்டால் குழந்தைகளின் திறன் மேம்படும்" என்று தெரிவித்தார்.
குழந்தைகளிடம் கேட்டதற்கு, "வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ஆசிரியை சுபாஷினி தங்களை இன்முகத்தோடு வரவேற்று பாடங்களை நடத்துவார். ஆசிரியையாக பழகாமல் தங்களின் நண்பரைப் போல் பழகுவதோடு மட்டுமல்லாமல், தினமும் புதிய புதிய விளையாட்டுகள் மற்றும் செயல்முறைக் கல்வியைத் தெரிவிப்பார்" என்று குறிப்பிட்டனர்.