திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக திருச்சி மாநகர செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு பேசியது:
திருச்சிக்கு ஜூன் 10-ம் தேதி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து அன்பில் கிராமத்துக்குச் சென்று, அன்பில் தர்மலிங்கம் சிலையைத் திறந்துவைக்கிறார். பின்னர், அன்று மாலை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் திறந்துவைக்கிறார். தொடர்ந்து, தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதிமுக ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று அவர்களுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. இந்த ஆட்சி நீடிக்கும் என அதிமுகவினருக்கே நம்பிக்கை இல்லை.
எப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டாலும் 200-க்கும் அதிகமான தொகுதிகளை திமுக நிச்சயம் கைப்பற்றும். அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால்தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று அவரை ஆட்சியில் அமரவைக்க மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். 15 சதவீதம் அல்லது 20 சதவீதம் கமிஷன் கிடைப்பதால் அதிமுக ஆட்சியில் சாலைப் பணிகளை மட்டும் மேற்கொள்கின்றனர். ஆனால், திருச்சியில் மக்கள் குடிநீருக்கு அல்லாடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றிவிடலாம். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். வருங்காலம் திமுகவுக்கு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
கூட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.