தமிழகம்

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பதினெட்டாங்குடி, அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த செபாஸ்டியான் என்பவரின் மகன் ஜெயபால், ராமநாதபுரம் - மதுரை நான்கு வழிச்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமம், கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்திலிருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் வாகனமும், சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கருப்பையா (எ) சுரேஷ், தொண்டியைச் சேர்ந்த அமீர் அலி என்பவரின் மகன் செய்யது இப்ராகிம் மற்றும் சேகு உதுமான் ரிபாய் என்பவரின் மகன் அப்துல் கலாம் ஆசாத் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பா என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா என்பவரின் கணவர் முத்து (எ) சுப்பிரமணி சாலையைக் கடக்க முற்பட்ட போது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மகன்கள் செல்வன் பரணிதரன், செல்வன் தரணிதரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வன் பூவரசன் ஆகிய மூன்று  சிறுவர்கள் ஏரியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் என்பவரின் மகன் அருண்குமார் என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அல்லியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ஜெயராஜ் மற்றும் பரசுராமன் என்பவரின் மகன் அன்பரசு ஆகிய இருவரும் கோவில் தேர் ஊர்வலத்தின் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், முனியன்குடிசை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன் செல்வன் வெற்றிவேல் என்பவர் மணல் திட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் மண் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், கீரைக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (லேட்) என்வரின் மனைவி மல்லிகா என்பவர் வீட்டின் கழிவு நீர் தொட்டி அடைப்பை சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை என்பவரின் மகன் ராஜ் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கிள்ளியூர் வட்டம், இணயம்புத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்த ஜெசித் என்பவரின் மகன் நெல்சன் கட்டுமரத்தில் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், ரெகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் என்பவரின் மகன் திருப்பதி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டை வட்டம், ராயபுரத்தைச் சேர்ந்த ஜான் என்பவரின் மனைவி திருமதி யாகுலமேரி பழவேற்காடு ஏரியில் படகு சவாரியின் போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் வட்டம், சிக்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் அசோக்  கிணற்றை தூர் வாருவதற்கு கயிறு கட்டி கிணற்றில் இறங்கும் போது, மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகளை அறிந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT