தமிழகத்தின் 32 சிலைகள் உள்ளிட்ட 40 சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்தது.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், "தமிழகம் கலைப்பொக்கிஷம் நிறைந்தது. ஏராளமான சிலைகள் கோயில்களில் இருக்கின்றன. ஏராளமான சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து பாரம்பரியமிக்க நம் நாட்டின் சிலைகள் எத்தனை மீட்கப்பட்டுள்ளன, எத்தனை இன்னும் மீட்கப்பட வேண்டும், கலைப்பொருட்களை அரசு பதிவு செய்துள்ளதா, நடவடிக்கை எடுத்ததா, ஆவணங்கள் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33 சிலைகளை மத்திய அரசு மீட்டுள்ளது. இன்னும் 40 சிலைகள் மீட்கப்பட உள்ளன. அதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் தலா 16 சிலைகள் இருக்கின்றன.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 39 ஆயிரம் கலைப்பொருட்கள் இருக்கின்றன. இவ்வாறு பதிவு செய்வது தொடர்ந்து நடக்கும். அறக்கட்டளையின் கீழ் கோயில்கள் ஏதும் இருந்தால், அந்தக் கோயில்களை அணுகி, அரசு சிலைகள் குறித்த தகவல்களைப் பெறலாம்.
இதுவரை 40 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 32 சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
ஆனால், வெளிநாடுகளில் இருக்கும் அருங்காட்சியகங்களில் எத்தனை இந்திய சிலைகள், நகைகள், இருக்கின்றன என்பதுகுறித்த தகவல் ஏதும் இந்திய தொல்பொருள் கழகத்திடம் இல்லை. அதேசமயம் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் கொண்டுவர ஏஎஸ்ஐ தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது" என்று பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.