தமிழகத்தின் வறட்சி நிலையைக் கருத்தில்கொண்டு தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க முன் வந்துள்ளது குறித்து கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொலைபேசிமூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயிலில் அனுப்ப கேரள அரசு முன்வந்தது. ஆனால், “தமிழக முதல்வர் அலுவலகம் எங்களுக்கு தமிழக முதல்வர் அலுவலகம் அனுப்பிய பதிலில் இப்போதைக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளது” என்று கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டநாட்களாக மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தென்மேற்குப் பருவமழை தாமதமாக வந்த நிலையிலும் கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய நீர் உள்ளதால் தமிழகத்துக்கு நீர் வழங்க கேரளா முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரிலிருந்து தொலைபேசி மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக கட்சி அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று இன்று கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை பார்த்தவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடனடியாக கேரள மாநில முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததுடன் தமிழகத்திற்கு தண்ணீர் தந்து உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில் தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கேரள மாநில முதல்வர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும் கேரள மாநில முதல்வரிடம் திமுக தலைவர் தெரிவித்துள்ளார்”
இவ்வாறு திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.