தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும், அனல் காற்று வீசும் என்பதால் பகல் நேர பயணத்தைத் தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
“தமிழக மலை மாவட்டத்தில் குறிப்பாக கோவை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். அதனால் பொதுமக்கள் பகல் நேர பயணத்தைத் தவிர்க்கவும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, நாகப்பட்டினம், மற்றும் புதுச்சேரியில் அனல் காற்று வீசும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 3 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.