தமிழகம்

கமுதி அருகே 12 ஆண்டுகளாக வறட்சியால் வாடும் மயில்களுக்கு இரை, குடிநீர் அளிக்கும் விவசாயி

கி.தனபாலன்

கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் விவசாயி ஒருவர் 12 ஆண்டுகளாக மயில்களுக்கு இரை, குடிநீர் அளித்து வருகிறார். ராமநாதபுரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் கால்நடைகள், பறவைகள் இரை இன்றி தவிக்கின்றன.

கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உக்கிர பாண்டியன். விவசாயியான இவர் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது வயலில் உழவுப் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது மலட்டாறு, குண்டாறு வனப்பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மயில்கள் இரை, குடிநீர் தேடி தனது ஊருக்கு அருகே சுற்றித் திரிந்ததைப் பார்த்தார்.

இதனால் மனம் வருந்திய உக்கிரபாண்டியன் தனக்கு வைத்திருந்த உணவு, குடிநீரை ஒரு பாத்திரத்தில் மயில்களுக்கு வைத்தார். தொலைதூரத்தில் இருந்து மயில்கள் இரை, குடிநீர் அருந்து வதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந் தார். கமுதி பகுதியில் மயில்களை சிலர் இறைச்சிக்காகவும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் வேட்டை யாடுவது அவ்வப்போது நடை பெறுகிறது. இதை தடுக்க வனத் துறை முன்வரவில்லை. ஆனால் விவசாயி உக்கிரபாண்டியன் தனி ஒரு ஆளாக மயில்களைப் பாதுகாத்து வருகிறார்.

இதுகுறித்து உக்கிரபாண்டியன் கூறியதாவது: வறட்சியால் மயில் கள் இரை, குடிநீர் இன்றி தவிப் பதைப் பார்த்து மனம் வருந்தினேன். அன்று முதல் மயில்களைப் பாதுகாக்க முடிவு செய்தேன். தினமும் காலையில் வீட்டில் இருந்து அரிசி, தானியங்கள், சோறு, குடிநீர் கொண்டு சென்று கருவேல் காட்டுப் பகுதியில் மயில் களுக்கு உணவளித்து வருகிறேன்.

தற்போது சந்தையில் உடைந்த தக்காளிகளை வாங்கி மயில்களுக்கு அளிக்கிறேன். காட்டுக்குள் சென்று நான் கூச்சலிட்டதும் கூட்டமாக மயில்கள் வரும். அவற்றுக்கு உணவு, குடிநீர் வைத்துவிட்டு தூரத்தில் நின்று ரசிப்பேன். நான் தினமும் காலையில் கொண்டு செல்லும் தானியங் களுக்காகக் காத்திருக்கும் மயில் களுக்காக கடந்த 6 ஆண்டுகளுக் கும் மேலாக அவசர தேவை யாக இருந்தால் கூட வெளியூர் செல்வதில்லை.

என் குடும்பத்துக்கு வாங்கும் ரேஷன் அரசி, சிலரிடம் குறைந்த விலைக்கு நெல், சோளம், கேழ்வரகு, சாமை, குருதிரைவாலி ஆகியவற்றை விலைக்கு வாங்கி மயில்களுக்கு அளிக்கிறேன். இதற்காக எனக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. கமுதி பகுதியில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT