தற்காலிக அணுக்கழிவு மையம் விரைவில் நிரந்தரமாக மாற வாய்ப்புள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம், விஜயபதி கிராமங்களில் தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சுந்தர்ராஜன், ''இந்தியாவில் அணுக்கழிவுகளை நிரந்தரமாக வைக்கக் கூடிய, ஓர் அணுக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கான முடிவுகளையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவரை தற்காலிக மையம் அமைப்பது நிச்சயம் ஆபத்தான போக்காக அமையும். இன்று இந்தியா முழுவதும் அணுசக்திக்கு எதிராக, அணு உலைகளுக்கு எதிராக மனப்போக்கு நிலவுகிறது.
இந்நிலையில் எந்த மாநிலமும் இதற்கு அனுமதி வழங்குவது கேள்விக்குறியே. இதனால் கூடங்குளத்தில் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மக்களுக்குச் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்'' என்றார் சுந்தர்ராஜன்.