தமிழகம்

தமிழக மக்களைக் காக்க எந்தப் போராட்டத்துக்கும் தயார்: வைகோ ஆவேசம்

செய்திப்பிரிவு

தமிழக மக்களைக் காக்க எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயார் என வைகோ ஆவேசமாக பேசினார்.

தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:

“நீர்வளத்துறை அமைச்சகத்துக்குப் பெயர் ஜல்சக்தி, மக்கள் நல்வாழ்வுத்துறைக்குப் பெயர் ஆயுஷ். இரண்டும் சமஸ்கிருதப் பெயர்கள். அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். திமுக தலைவரே முடிவெடுங்கள். நான் ஏற்கெனவே கூறியபடி உங்களுக்கு எப்போதும் துணை நிற்பேன்.

என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுங்கள். மும்மொழிக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியைத் தீயிட்டு கொளுத்த வேண்டுமா? தயாரா? தயாரா? தெருவுக்குத் தெரு தீயிட்டுக் கொளுத்துவோம். மொழிப்போர் தியாகிகள் எதற்காக மடிந்தார்களோ, இந்திய ராணுவத்தின் முன் எதற்காக மார்பைக் காட்டி மடிந்தார்களோ அந்தத் தியாகம் வீண் போகாது.

அவர்கள் பசப்பு வார்த்தைகள் பேசுகிறார்கள். நிச்சயம் திணிக்கப்போகிறார்கள். இது ஏமாற்று வேலை. மோடியின் கூட்டத்தில் ஆபத்தான இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறார் அமித் ஷா. இவரும், அவரும் சேர்ந்துதான் கொலைக்களங்கள் நிகழ்ந்தன குஜராத்தில். இன்றைக்கு அவர் உள்துறை அமைச்சர்.

அந்த உள்துறை அமைச்சகத்திலிருந்துதான் அந்த வார்த்தைகள் வருகின்றன. அரசியல் அமைப்பின் 370 பிரிவை நீக்குவேன், 35(எ) பிரிவை நீக்குவேன். யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது. அரசு கையெழுத்து போட்டபோது இந்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று உலகம் கேட்கும், நானே கேட்பேன்.

கோதாவரியிலிருந்து காவிரிக்கு நீர் வரும் மகிழ்ச்சி, கானல் நீரை நம்பி ஓடி மான்கள் இறந்தன என்று காண்டேகர் எழுதினாரே அந்த நிலைக்கு தமிழர்கள் ஆளாவார்களோ என நான் அஞ்சுகிறேன். கோதாவரியும் காவிரியும் தண்ணீர் வந்துவிடும் என்று பசப்பாதீர்கள். வந்தால் மகிழ்ச்சி வரப்போவதில்லை.

அவர்கள் அழிக்கத் திட்டமிட்டுவிட்டார்கள், மேகதாது மூலமாக. இன்றைக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை பரிதவிக்கிறார்கள் கோடிக்கணக்கான தமிழ் மக்கள். 19 மாவட்டங்களில் குடிக்கத் தண்ணீர் இருக்காது. இப்போதே ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நடுகை நட்டு அந்த இடத்திலே எப்படி பொக்லைனைக் கொண்டு வந்து நிறுத்துகிறாய், எங்களை அழிக்கத் துடிக்கிறாய் என்று கேட்கும் விவசாயிகள் சார்பில் கேட்கிறேன்.

நம்மை அழிக்கத் திட்டமிட்டுவிட்டார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து. ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்குத்தான் 272 கிணறுகள். நம்மை அழிக்கத் திட்டமிட்டுவிட்டார்கள். இந்த இடத்தில்தான் காப்பதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். இதை புகழ்ச்சிக்காக நான் சொல்லவில்லை.

இந்திய அரசியல் சட்டத்துக்கு தீயிட்டவர்கள் நாங்கள். அரசியல் சட்டத்துக்கு தீயிட்ட இயக்கம் திமுக. அரசாங்க உத்தரவை வீதிக்கு வீதி, நாற்சந்தி முனையிலே தீயிட்டுக் கொளுத்துவோம்”.

இவ்வாறு வைகோ பேசினார்.

SCROLL FOR NEXT