காங்கிரஸ் இயக்கம் எந்த காலகட்டத்திலும், பாஜகவையோ, அதன் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தையோ, அவர்களின் பிதாமகனான ஆர்.எஸ்.எஸ்.ஸையோ ஒரு போதும் ஆதரிக்காது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக மேயர் வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சனிக்கிழமை கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேர்தலை புறக்கணிக்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளரை ஆதரிக்க முன்வர வேண்டும் என்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் `தி இந்து’ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தலை காங்கிரஸும், வேறு சில கட்சிகளும் சில காரணங்களால் புறக்கணித்துள்ளன. இந் நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், தேர்தலைப் புறக்கணிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. அந்த தலைவருக்கு இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது; ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கென்று லட்சியங்களும், கொள்கைகளும் உண்டு. அப்படிப்பட்ட காங்கிரஸ் இயக்கம் எந்த காலகட்டத்திலும், பாஜகவையோ, அதன் முன்னோடியான பாரதிய ஜனசங்கத்தையோ, அவர்களின் பிதாமகனான ஆர்.எஸ்.எஸ்.ஸையோ ஒரு போதும் ஆதரித்தது இல்லை.
சமுதாய நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றில் முழுமையான நம்பிக்கையும், நாட்டமும் கொண்டது காங்கிரஸ் கட்சி. அப்படி இருக்கும்போது சமுதாய நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த சக்தியோடும், எந்த காலகட்டத்திலும் காங்கிரஸ் உறவு கொள்ளாது. வெற்றி பெற எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம் என்பது பாஜக தமிழக தலைவரின் எண்ணம். அந்த சித்தாந்தம் எங்களுக்கு ஏற்புடையதல்ல என்றார்.