தமிழகம்

அரசுப் பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் அமைக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலர் ஆனந்தவல்லி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறியதாவது:

’’தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பருவம் எய்திய மாணவிகள் மாதவிடாய் காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்களை வைக்க வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையேற்று  நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT