ஆரோவில் அருகே உரிய அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்ற சம்பவத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியையொட்டிய தமிழக பகுதியான ஆரோவில் அருகே 'வீக் எண்ட்' எனப்படும் சனிக்கிழமை இரவில் இளைஞர்கள், இளம் பெண்கள் மது அருந்தி, மின்னொளியில் இசையுடன் ஆடிப்படி கொண்டாட வாருங்கள் என்ற இசைக் கட்சி நிகழ்ச்சி குறித்து இணைய தளத்தில் விளம்பரம் வெளியானது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ஜோடிக்கு ரூ.1,000 கட்டணம் என்று கூறியுள்ளது. இதனை, இணையத்தில் பார்த்த பலரும் பணத்தைக் கட்டி, டிக்கெட் புக் செய்துவருகின்றனர் என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விழுப்புரம் எஸ்பி ஜெயகுமாரிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸார் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது பணத்தை ஆன்லைனில் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு பேசமுடியும் என தொடர்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் துண்டித்தார்.
பின்னர் ஆரோவில் போலீஸாரின் உறவினர் ஒருவரை அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசி, ஆன்லைனில் ரூபாய் 1000 பணம் செலுத்தப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கூகுள் மேப் லிங்கை பணம் கட்டியவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி சனிக்கிழமை இரவு எஸ்பி ஜெயகுமார் தலைமையில் பெண் போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பைக்கில் முந்திரி காட்டுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் பயணித்து, பின்னர் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று நேற்று அதிகாலை 1 மணிக்கு போதையில் நடனமாடியவர்களை சுற்றிவளைத்தது.
இதுகுறித்து எஸ்பி ஜெயகுமார் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியது, "நாங்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நெருங்கியவுடன் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டது. அங்கு இருந்த 3 பெட்டர்மாஸ் விளக்குகளுடன் போதையில் ஆடிபாடிக்கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்டோரை விசாரித்தோம். அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 2 திரைப்பட உதவி இயக்குநர்கள், 4 மருத்துவர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பட்டியல் நீள்கிறது.
டிக்கெட் வாங்கி செல்பவர்களுக்கு வெல்கம் டிரிங்ஸாக ஒரு டின் பியர் வழங்கப்படுகிறது. அடுத்து அங்கு ரூ. 200-க்கு ஒரு டின் பியர் என விற்கப்பட்டுள்ளது. வேறு வகையான மதுபானங்கள் இல்லை. சிலரிடம் சேகரிக்கப்பட்ட 125 கிராம் கஞ்சா, 161 டின் பியர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது என்றதாலே பங்கேற்றோம். அனுமதி பெறாமல் நடைபெற்றுள்ளது என்பது இப்போதுதான் தெரிகிறது என்றனர். எனவே அவர்களை அனுப்பிவிட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக 15 பேரை கைது செய்துள்ளோம்.
இப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்க கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிக கடினம்" என்றார்.