தமிழகம்

குடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில் தண்ணீர் பிரச்சினையே இல்லை என அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தவறான தகவலைத் தருகிறார் என திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன் குற்றம் சாட்டினார்.

திருப்பரங்குன்றத்தில் நேற்று தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை சரவணன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீருக்காக 250 ஆழ்துளைக் கிணறுகள், 2,500 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதி மக்கள் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் மோசமான நிலையில் இருந்தது. இந்த அலுவலகத்தை எட்டிப் பார்க்கக் கூட இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அலுவலகத்தில் இ சேவை மையம் விரைவில் அமையும். வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும்.

100 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை இல்லாமல் சீராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரி வித்திருக்கிறார். அவர் உண்மையான குடிநீரைப் பற்றி கூறியிருக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 90 பள்ளிகள் உள்ளன. இதில் எந்த பள்ளியிலும் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி முறையாக இல்லை. அந்த பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை விரைவில் ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT