நெம்மேலியில் விரைவில் 3-வது கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சர் வேலுமணி உறுதியளித்துள்ளார்.
பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிய நீர் தேக்க திட்டம் ஆகியவற்றை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் வேலுமணி, "பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வகையில் செங்கழுநீர் மலை கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து வழங்கப்பட உள்ளது.
5 குவாரி தண்ணீரை நவீன சுத்திகரிப்பு மையம் மூலமாக சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் ரூ.6.04 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால், கூடுதலாக இந்நகராட்சிகளுக்கு மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும்.
அனகாபுத்தூர் நகராட்சிக்கு 10 லட்சம் லிட்டர், பம்மல் நகராட்சிக்கு 15 லட்சம் லிட்டர் வீதம் விநியோகிக்கப்படும்.
இதுவரை 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்ட குடிதண்ணீர் இனி மூன்று நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படும்.
சென்னையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நெம்மேலியில் கடல்நீர் சுத்திகரிப்பு மூன்றாவது ஆலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்" என்று தெரிவித்தார்.