தமிழகம்

இஸ்லாமை இழிவுபடுத்தும் பப்ஜி விளையாட்டைத் தடை செய்க: காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் மனு

செய்திப்பிரிவு

இஸ்லாமை இழிவுபடுத்தும் பப்ஜி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள மனுவில் கூறியதாவது:

''ஆன்லைன் விளையாட்டு மோகம், இளைஞர்களையும், மாணவர்களையும் அடிமைகளாக மாற்றி வருகிறது. மைதானங்களில் சென்று விளையாடிய குழந்தைகள், வீட்டில் அமர்ந்துகொண்டு செல்போன், கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் விளையாட்டில் தங்களது நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

பப்ஜி மட்டுமன்றி ப்ளூவேல் போன்ற ஆன்லைன் விளையாட்டால் பல இளைஞர்களும், மாணவர்களும் தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இந்திய நாட்டின் சக்தியே இளைஞர்கள்தான். அதிக அளவு இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியா, வல்லரசாகும் இலக்கை விரைவில் எட்டிவிடும் நிலையில் உள்ளது. இதைத் தடுக்க எண்ணும் வெளிநாட்டு சக்திகள் ஆன்லைன் விளையாட்டு மூலம் நாளைய சமுதாயத்தை முடக்க சதி செய்கின்றன.

அந்த வகையில் இஸ்லாமியர்களிடையே வேதனை ஏற்படுத்தும் வகையில், பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டின் புதிய பதிப்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான 'காஃபாவை' போன்ற மாதிரி வடிவத்தை உருவாக்கி இழிவுபடுத்தியுள்ளனர்.

இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை மிகவும் புண்படுத்தும் செயலாக உள்ளது. ஆகவே, பப்ஜிவிளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT