குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுலகத்தில் மின்தடை குறைதீர்க்கும் கணினி மைய திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். மேற்பார்வைப் பொறியாளர் உமாதேவி வரவேற்றார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவற்றைத் துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோடை காலத்திற்கு முன்பே எந்தெந்த மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்ற முன்மொழிவுகள் கேட்கப்பட்டன. அதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஓபிஎஸ்.ஸுடன் இயல்பாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ.,க்கள்:
நிகழ்ச்சியில் எம்எல்ஏ.க்கள் ஜக்கையன், முன்னாள் எம்பி.சையதுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக எம்எல்ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் துணை முதல்வருடன் இயல்பாக பேசி தங்கள் தொகுதி பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர்.
இதே போல் கடந்த வாரம் பெரியகுளத்தில் நடைபெற்ற அரசு விழாவிலும் திமுக எம்எல்ஏ.சரவணக்குமார் பங்கேற்றார்.
பொதுவாக அரசு விழாக்களில் எதிர்கட்சி எம்எல்ஏ.க்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையில் சமீபகாலமாக திமுக எம்எல்ஏ.க்கள் ஆர்வமாக கலந்து கொண்டு இயல்பாக ஆளும்கட்சி பிரதிநிதிகளுடன் பேசி வருகின்றனர்.
இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.