தமிழகம்

நாடு முழுவதும் 25 ஜவுளிப் பூங்கா அமைக்கத் திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 25 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க இருப்பதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வர் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வெள்ளி விழா ஆண்டு தொடக்க விழா, ஐகேஎஃப் அரங்கில் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் பேசியது:

ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடங்கும்போது ரூ.289 கோடியாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், தற்போது ரூ.18 ஆயிரம் கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. மத்தியில் அமைந்துள்ள புதிய அரசின் மீது ஏற்றுமதி யாளர்கள் அதிக நம்பிக்கை வைத் துள்ளனர். அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டம், திருப்பூர் தொழில்துறையினருக்கு பெரிதும் உதவும்.

தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், பெண் தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள், தொழிலாளர் பயிற்சி மையம், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகியன ஏற்படுத்தப்பட வேண்டும்; பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கப் படும் சேவையை 0.5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆடை உற்பத்தி இயந்திரங்கள் இறக்குமதிக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தார். அடுத்த 3 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடியாக ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்துவோம் என்றார்.

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தங்கவேல் பேசுகையில், தொழிற்சங்கம் என்ற முறையில் பல முறை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் முரண்பாடுகள் இருந்துள்ளன. ஆனால், அந்த முரண்பாடுகள் அனைத்தும் வளர்ச்சியை நோக்கித்தான் இருந்துள்ளன. திருப்பூருக்கான பல திட்டங்கள் அறிவிப்பாகவே இருக்கின்றன. தொழில், சமூக வளர்ச்சி என பன்முகத்தன்மை பார்வையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் செயல்பட வேண்டும் என்றார்.

ஜவுளித் துறை விரைவுத் திட்டம்

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வர் பேசியது:

நாடு முழுவதும் 25 ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு, சில தினங்களில் வெளியாகும். மாநில ஜவுளித் துறை அமைச்சர்களை சந்தித்து, ஜவுளித் துறை குறித்த திட்ட வரைவு தயார் செய்யப்படும் என்றார்.

ஏஇபிசி தலைவர் வீரேந்தர் உப்பல், ஏற்றுமதியாளர் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பேசினார். பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கச் செயலாளர் ஜி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT