தமிழகம்

ஓபிஎஸ் சொன்னபடிதான் ராஜன் செல்லப்பா பேசினார்: பழனியப்பன்

செய்திப்பிரிவு

ஓபிஎஸ் சொன்னதால்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசினார் என்று அமமுக தலைமை நிலையைச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா, "அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இன்னும் முழுமையாக இணையவில்லை.

ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமைத் திறன் இப்போது கட்சிக்குள் யாருக்குமே இல்லை. அதனால், பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். கட்சிக்கு இரண்டு தலைமைகள் தேவையில்லை. அதிகாரமிக்கவர் தலைமைக்கு வர வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இது அதிமுகவுக்குள்ளும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனியப்பன் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:

''சந்தர்ப்பவாதத்துக்காக இருவரும் ஒன்றுசேர்ந்தார்கள். இப்போது எல்லாம் வெளிப்பட்டு விட்டது. எவ்வளவு நாள்தான் வெளியே தெரியாமல் மறைத்துவைக்க முடியும்? பூனைக்குட்டி இன்று வெளியே வந்துவிட்டது. அதைத் தடுக்க ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பாவை வைத்து இப்படிப் பேசு என்று சொல்கிறார்.

ஓபிஎஸ் தனியாக டெல்லிக்குச் சென்றார். ஈபிஎஸ் தனியாக டெல்லிக்குச் சென்றார். இருவரும் தனித்தனியே சென்று அமர்ந்தனர். இருவரும் சேர்ந்து அறிக்கைகள் எதையும் வெளியிடுவது இல்லை. ஈபிஎஸ் போகும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொள்வதில்லை. ஓபிஎஸ் செல்லும் நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி போவதில்லை.

இந்த மாதிரியான சூழல்தான் இப்போது இருக்கிறது. இது அவர்கள் நடத்தும் தலைமைக்கு, இயக்கத்துக்கு அழிவாக அமைந்துவிட்டது'' என்றார் பழனியப்பன்.

அதிமுகவில் இரட்டைத் தலைமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT