தமிழகம்

சென்னையில் ரவுடிகளிடம் புழங்கும் துப்பாக்கி; மோதலில் காயம்பட்ட ரவுடியால் வெளிவந்த உண்மை: 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னையில் ரவுடிகளிடம் நவீன துப்பாக்கிகள் வரவு அதிகரித்துள்ளது. இரண்டு ரவுடிகளிடையே நடந்த மோதலில் காயம்பட்ட ரவுடி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப்பின் உண்மை தெரிந்து 2 ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னையில் சமீபத்தில் நடந்த மோதலில் சொந்தத் தம்பியையை ஒரு அரசியல் பிரமுகர் சுட்டுக்கொன்றார். அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இம்முறை ரவுடிகள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூட்டில் ஒரு ரவுடி மீது குண்டு பாய்ந்துள்ளது.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எண்ணூரைச் சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயத்துடன் சிகிச்சை பெற வந்ததாக எண்ணூர் போலீஸாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை செய்ததில், குண்டு பாய்ந்த நபர் எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்த செந்தில் (எ) கஞ்சி செந்தில் (39) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், செந்தில் கடந்த 8-ம் தேதி சிவகாமி நகர் 11-வது தெருவில் மணல் மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு அப்பகுதியைச் சேர்ந்த பி.டி.ரமேஷ் மற்றும் அலெக்சாண்டர் என்ற இரு ரவுடிகள் அதே பகுதியைச் சேர்ந்த தேவா என்பவரிடம் தகராறு செய்துகொண்டு இருப்பதைப் பார்த்துள்ளார்.

உடனே செந்தில், பி.டி.ரமேஷ் மற்றும் அலெக்சாண்டரிடம் சமாதானம் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பி.டி.ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து செந்திலைச் சுட்டபோது, செந்திலின் வலது பக்க இடுப்பு அருகே குண்டு பாய்ந்தது.

இது குறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என ரமேஷ் மற்றும் அலெக்சாண்டர் மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் செந்தில் வெளியில் யாரிடமும் சொல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காயம்  தீவிரம் ஆனதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.

அதைத் தொடர்ந்து எண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ், அலெக்ஸ் இருவரையும் நேற்று கைது செய்தனர். மேலும் ரமேஷிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர்.

ரமேஷ் மீது 2 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள், 10 வழிப்பறி வழக்குகள் உட்பட சுமார் 25 குற்ற வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாளார். அலெக்சாண்டர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது.

கைது செய்யப்பட்ட  இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT