தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்: புதிய அமர்வு அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரும் வேதாந்தா வழக்கை தான் விசாரிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியதை அடுத்து ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடந்து வந்தது. ஆலைக்கு ஆதரவாக அரசு இருப்பதாகக் கூறி 100 நாட்கள் தொடர் போராட்டத்தை பொதுமக்கள் நடத்தினர்.

100-வது நாளான கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் திரண்டு மிகப்பெரிய பேரணியை நடத்தி ஆட்சியரை சந்திக்கச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும்போது போராட்டம் கலவரத்தில் முடிய, போலீஸார் கலவரக்காரக்கார்களை ஒடுக்குவதாகக் கூறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. மூடிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தீர்ப்பை பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அமர்வு விசாரிக்கும் என பட்டியலிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து நீதிபதி சசிதரன் விலகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என நீதிபதி சசிதரன் ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் உயர் நீதிமன்றப் பதிவாளர் வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT