சென்னை திருவொற்றியூரில் கணவனுடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் செயினைப் பறித்த கொள்ளையர்கள் அவர்களைக் கீழே தள்ளிவிட்டதில் கணவன் மனைவி இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் ராஜாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (35). இவரது மனைவி மீனா(32). மீனாவின் தாய் எண்ணூரில் வசித்து வருகிறார். அவரைக் காண ரவிக்குமாரும் மீனாவும் சென்றனர். மோட்டார் பைக்கை ரவிக்குமார் ஓட்ட மீனா பின்னால் அமர்ந்து சென்றார்.
தாயாரைப் பார்த்த பின் இருவரும் புறப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எண்ணூர் விரைவு சாலை, ராயல் என்பீல்டு கம்பெனி அருகில், மோட்டார் பைக் வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், மீனா கழுத்தில் கிடந்த 20 சவரன் தங்கச் செயினைப் பறிக்க முயற்சி செய்தனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனா அவர்கள் செயினைப் பறிக்காமல் இருக்க இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது. கொள்ளையர்கள் செயினைப் பறிக்கும் வேகத்தில் அவர்களைத் தள்ளிவிட்டு செயினை அறுத்துச் சென்றனர்.
இதில் செயின் அறுந்து, கொள்ளையர்களின் கையில், ஒரு சவரன் மட்டும் சென்றுவிட்டது. மீதி செயின் மீனா பிடித்திருந்ததால் தப்பித்தது. ஆனால் ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ரவிக்குமார், மீனா அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு தப்பி ஓடிய செயின் பறிப்பு நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று திருவொற்றியூர் சாத்தாங்காட்டில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தீவுத்திடல் முத்துசாமி பாலம் அருகே ஓடும் மோட்டார் சைக்கிளில் செயின் பறிக்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர், சாத்தாங்காடு, பகுதியில் வசிப்பவர் கஜேந்திரன். இவரது மனைவி ராஜஸ்ரீ(32), இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திப் பிரிவு உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து, ராஜஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தீவுத்திடல் முத்துசாமி பாலம் பகுதியில் வரும்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், ராஜஸ்ரீ கழுத்தில் கிடந்த ஒரு சவரன் தாலி செயினைப் பறித்துக்கொண்டு தப்பினர்.
அதிர்ஷ்டவசமாக ராஜஸ்ரீ மோட்டார் சைக்கிள் கவிழாமல் தப்பினார். இது தொடர்பாக , ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில், பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களைத் தாண்டி மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.