ஐஏஎஸ், ஐபிஎஸ் என குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Peliminary Exam) நாளை (ஜூன் 2) நடைபெற உள்ளது. யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வை சுமார் 10 லட்சம் பட்டதாரிகள் எழுத உள்ளனர்.
இதில், முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களைக் கடந்து வெற்றி பெறுபவர்கள் 1 - 2 சதவீதத்தினரே. முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுவபவர்கள் முதன்மைத் தேர்வையும் அதில் வெல்பவர்கள் நேர்காணலிலும் கலந்துகொள்ள முடியும். இதில் எதில் தோல்வி அடைந்தாலும் ஆரம்பத்தில் இருந்து முதல்கட்டத் தேர்வை எழுதவேண்டும்.
இதற்கான நுழைவு அட்டையை யுபிஎஸ்சி ஏப்ரல் 30-ம் தேதி வெளியிட்டது. இ- நுழைவு அட்டை, அதில் குறிப்பிட்டுள்ள ஒரிஜினல் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வந்தால் மட்டுமே தேர்வை எழுதமுடியும். புகைப்படமோ, கையெழுத்தோ தெளிவாக இல்லாத பட்சத்தில், மாணவர்கள் இரண்டு புகைப்படங்களை எடுத்துவர வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும் 72 நகரங்களில் நடைபெறுகிறது.