நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு கோரி , தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றியும் மத்திய மாநில அரசுகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டித்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், இன்று விடுத்துள்ள அறிக்கை:
“நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு கோரி , தமிழக சட்டமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை இது வரை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவில்லை.
மாநில அரசும் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வில்லை. நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு பெற்றிருந்தால் இத்தகைய இறப்புகள் ஏற்பட்டிருக்காது.
உயிரிழந்த மாணவியரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு தலா ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு வழங்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் விகிதம் குறைவாக உள்ளது.
இதனால் தமிழக மாணவர்கள் அகில இந்தியத் தொகுப்பு இடங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் சேரும் வாய்ப்பு, மற்ற மாநிலத்தவரைவிட மிகவும் குறைவாக இருக்கும். இது கவலை அளிக்கிறது.
தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தரமானதாக வழங்கவில்லை. பயிற்சி மையங்களின் தரத்தையும், அரசுப் பள்ளிகளின் தரத்தையும் தமிழக அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வு முடிவுகளில், மொத்த தரப்பட்டியலை (Merit list) வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கிறது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களின் பெயர், பதிவு எண், நீட் மதிப்பெண், பொதுவான தர எண், சாதி (வகுப்பு ) அடிப்படையிலான தர எண், மாநிலத்தின் பெயர், வயது, பிறந்த தேதி போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய தகுதிப் பட்டியலை, தேசிய மற்றும் மாநில அளவில் ( National level and State level merit lists) வெளிப்படையாக உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு வெளியிடாதது, வெளிப்படைதன்மையை காப்போம் என்ற, மத்திய அரசின் வாக்குறுதிக்கு எதிரானது. மத்திய அரசின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வெளிப்படைத் தன்மையற்ற இப்போக்கு, பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கிறது.
முன்னேறிய வகுப்பு ( உயர்சாதி) மாணவர்களுக்கு, பொதுவான தர எண் (Over All Rank number) வழங்கியுள்ளதோடு, இட ஒதுக்கீடு இல்லாதவர் ( unreserved rank) என்ற அடிப்படையில் தனி தர எண் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
திறந்த போட்டி இடங்கள் (open Quota) இடங்கள் அனைவருக்கும் உரியதாகும். அதை இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கான இட ஒதுக்கீடாக மாற்றி, ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் எவ்வளவு அதிகமான மதிப்பெண் பெற்றாலும் அவர்கள், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே இடங்களை பெற வேண்டும் என்பது போன்ற நிலையை உருவாக்குவது கண்டனத்திற்குரியது.
Unreserved பிரிவு என, ஒரு புதுப் பிரிவை உருவாக்குவது, இட ஒதுக்கீட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழக மருத்துவ இடங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும்.
தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் உட்பட, அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் மத்திய - மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய மாநில - அரசுகள் மட்டுமே நடத்த வேண்டும். கடைசி கட்ட மாணவர் சேர்க்கையை , நேரடியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்திக் கொள்ள அனுமதித்திருப்பது மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளையே ஏற்படுத்திவருகிறது.
எனவே இறுதிக் கட்ட மாணவர் சேர்க்கை வரை மத்திய - மாநில அரசுகளே நடத்திட வேண்டும். தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள், அவை இடம் பெற்றுள்ள மாநில அரசுகளின் ஒதுக்கீட்டிற்கு 65 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.